சென்னை: இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 9,166 பேர் பயனடைந்துள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மாரடைப்பு இறப்பு அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறை இருந்தாலும் சரியான நேரத்தில் மாரடைப்புக்கு சிகிச்சை கிடைக்காதது பெரிய பிரச்னையாக இருந்தது. இதற்கு தீர்வாக தமிழக அரசு ‘இதயம் காப்போம் திட்டம்’ கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.3.37 கோடியில் தொடங்கப்பட்டது.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது முதல் 60 நிமிடம் மிகவும் முக்கியமானது. எனவே தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரம் ஆகும். இதனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலில் மாரடைப்பை தடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மாரடைப்புடன் வருபவர்களுக்கு அதனை தடுக்கும் வகையில் ஆஸ்பிரின் 150 எம்ஜி – 2 மாத்திரைகள், க்ளோபிடோக்ரல் 75 எம்ஜி – 4 மாத்திரைகள், அடோர்வாஸ்டாடின் 10 எம்ஜி – 8 மாத்திரைகள் என மொத்தம் 14 மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
பிறகு மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது இந்த திட்டம் மூலம் கடந்த ஜூலை வரை 9,166 பேர் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை மொத்தம் 9,949 பேர் மாரடைப்பு அறிகுறியுடன் வந்துள்ளனர். அவர்களில் இந்த திட்டத்தின் கீழ் 9,166 பேருக்கு மாரடைப்பு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக படியாக, விழுப்புரத்தில் 464 பேரும், கோவையில் 458 பேரும், சென்னையில் 438 பேரும், திருப்பூரில் 427, ஈரோட்டில் 439 பேரும் பயனடைந்துள்ளனர்.