சென்னை: அதிமுக. ஆட்சியில் கையெழுத்து போட்டுவிட்டு, இன்று சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது. சொத்துவரி உயர்வு பற்றிப் பேச அதிமுகவுக்கு அருகதை இருக்கிறதா என்று அமைச்சர் கே.என்நேரு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது’’ என வழக்கம் போலவே ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். ஒன்றிய பாஜ அரசு கைநீட்டிய இடங்களில் எல்லாம் அதிமுக ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டதன் விளைவால் தான் நாம் ஒன்றிய அரசின் பிடிகளில் சிக்கித் தவிக்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி மோடி அரசின் அடிமையாகி கையெழுத்து போட்டதால், 15வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியது. அதனால், வேறுவழியின்றித் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டி நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்காத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாகப் பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிக மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டு வருகிறது.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 30 சதவிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டதால் தான் சில நூறு ரூபாய் மட்டும் வரியாகக் கட்டி வந்த மக்கள் ஆயிரங்களில் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒன்றிய அரசு இப்படிக் கடுமையான விதிகளை 15வது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது அவர்களோடு நட்புறவில் இருந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்குக் காரணம் என்று சொல்வது தானும் தனது ஒன்றிய பாஜ எஜமானர்களும் சேர்ந்து செய்த துரோகத்தை மூடி மறைக்க மட்டுமே.
அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கான சொத்து வரியைத் தமிழ்நாடு முழுவதும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் சொத்துவரி 1.4.2018 முதல் அமல்படுத்தப்பட்டது. அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் மக்களிடம் இருந்து உயர்த்தப்பட்ட சொத்து வரியை வசூலித்தார்கள். 2019 நவம்பரில் பேட்டி அளித்த அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ’’சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ எனச் சொன்னார். ’தற்காலிகம்’ என்றால் அந்தச் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய முடியாது என்று அர்த்தம்.
அவர்களே அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு, இன்றைக்குச் சொத்து வரி உயர்வுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி. 2018 ஜூனில் சட்டசபை கூட்டத்தொடரில், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி 1919ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவைத் தாக்கல் செய்தார். அதில், ’உரிய காலத்திற்குள் சொத்துவரியைக் கட்டத் தவறுபவர்களுக்கு, வட்டி விதிக்கும் நடைமுறை தற்போது இல்லை.
4வது மாநில நிதி ஆணையம், சொத்து வரியைக் காலம் தாழ்த்திச் செலுத்துவோருக்கு, வட்டி விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆய்வு செய்யுமாறு, அரசுக்குப் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, அதை ஏற்பது என முடிவு செய்துள்ளது’ என்று வேலுமணி கூறினார். அன்றைக்கு மாநில நிதி ஆணையம் சொன்னதை ஏற்றுக் கொண்ட அதிமுகதான், இன்றைக்குச் சொத்து வரி உயர்வுக்கு ஓலம் இடுகிறது.
சொத்து வரி உயர்வைக் கண்டிக்கிற அதிமுக, அதனைக் கட்டாயப்படுத்திய ஒன்றிய அரசோடு கூட்டணியில் இருந்தபோது அதனை மக்களிடம் மறைத்தது ஏன்? வரியை உயர்த்த உண்மையான காரணத்தை மு.க.ஸ்டாலின் அரசு சொன்னால் திசை திருப்பும் வகையில் பொய் அறிக்கை வெளியிடுகிறது அதிமுக. ஆட்சியில் இருந்த போது ஆதரித்து கையெழுத்து போட்டுவிட்டு, இப்போது சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது. அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போட்டு அந்நியன் படத்தில் வரும் வசனம் போல ’பின்றியே’ என்றுதான் பழனிசாமியை சொல்லத் தோன்றுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.