சென்னை: போலி ஆவணங்கள் மூலம் சொத்துகளை அபகரித்து அழகப்பன் ரூ.11.10 கோடிக்கு விற்ற வழக்கு தொடர்பாக, நடிகை கவுதமியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். சினிமா நடிகை கவுதமி 2023 செப்டம்பர் 11ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், 2004ம் ஆண்டு எனக்கு புற்றுநோய் ஏற்பட்டதால் 4 வயது மகளின் எதிர்காலத்திற்காக அனைத்து சொத்துகளையும் விற்பனை செய்ய அழகப்பன் என்பவரை நான் பவர் ஏஜென்டாக நியமித்தேன்.
ஆனால் அவர், தனது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா அழகப்பன் என்ற சதீஷ், மகள் ஆர்த்தி அழகப்பன் மற்றும் உறவினர்களான பாஸ்கர், ரமேஷ் சங்கர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கடந்த 2015-16ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 10.63 ஏக்கர் விவசாய நிலம், ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், அவர் எனது வங்கி கணக்கில் ரூ.58 லட்சம் மற்றும் ரூ.4.20 லட்சம் மட்டும் வரவு வைத்துள்ளார். மீதமுள்ள பணத்தை அழகப்பன் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் உள்ள வங்கி கணக்கில் மாற்றிவிட்டார்.
அதேபோல், கடந்த 10.2.2021ம் ஆண்டு ராமநாதபுரத்தில் உள்ள 8.23 ஏக்கர் நிலத்தை அழகப்பன் தனது மகன் சிவா அழகப்பன், மகள் ஆர்த்தி அழகப்பன் பெயரில் பதிவு செய்து கடந்த 20.10.2015ம் ஆண்டு விற்பனை ஆவணத்தை மாற்றி எனது சொத்துகளை ஏமாற்றி பறித்துக்கொண்டார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.7 கோடி பணத்தை அவரது கூட்டாளியான அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் பலராமன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஏமாற்றி விட்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அழகப்பன், தனது மனைவி நாச்சல் அழகப்பன் மற்றும் மகன், மகள் பெயர்களில் சொத்துகளை மாற்றி எழுதியதும், தனது நண்பரான பலராமனுடன் சேர்ந்து கவுதமியின் சொத்துகளை மோசடி செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த பலராமன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்து இருந்தது உறுதியானதால், மத்திய குற்றப்பிரிவில் இருந்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அதன்படி நடிகை கவுதமியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகை கவுதமி நேற்று காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அழகப்பனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு. உங்கள் சொத்துகளை கவனிக்க அழகப்பனை ஏன் பவர் ஏஜென்டாக நியமித்தீர்கள் என 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு கவுதமி அளித்த பதிலை அமலாக்கத்துறை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். 7 மணி நேரம் நீடித்த விசாரணை மாலை 6 மணிக்கு முடிந்தது.