Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீதிக்கு வந்த சொத்து பிரச்னை நெல்லை ‘இருட்டுக்கடை’ யாருக்கு?.. உயில் இருப்பதாக சகோதரர் புதுகுண்டு

நெல்லை: நெல்லை டவுனில் பிரசித்தி பெற்ற அல்வா கடையான இருட்டு கடை சமீபகாலமாக கடும் சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. அக்கடைக்கு உரிமை கொண்டாடி எழும் பிரச்னைகள் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இருட்டுக் கடை விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக நேற்று கடை உரிமையாளர் பிஜிலி சிங் ஏற்கனவே தனக்கு எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தற்போது கடையை நடத்தி வரும் கவிதாவின் உடன்பிறந்த சகோதரர் லாலா நயன்சிங் தெரிவித்தார். இதுகுறித்து நயன்சிங் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 100 ஆண்டுகளுக்கு முன் நெல்லை டவுனில் இருட்டுக்கடையை தொடங்கியவர் கிருஷ்ணசிங். அவருக்கு பின் அவரது மகன் பிஜிலிசிங் கடையை நடத்தி வந்தார்.

இவர் 2000ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இவர்களுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது மனைவி சுலோச்சனாபாய் ஊழியர்களை கொண்டு கடையை நடத்தி வந்தார். சுலோச்சனாபாய் சகோதரர்தான் எனது தந்தை ஜெயராம்சிங். எனது தந்தை இருட்டுக்கடையை நடத்த எனது அத்தை சுலோச்சனாபாய்க்கு உறுதுணையாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1999ம் ஆண்டே இருட்டுக்கடை மற்றும் அது சார்ந்த சொத்துக்கள் சுலோச்சனாபாய்க்கு பின் நயன்சிங்கான எனக்குதான் என பிஜிலிசிங் உயில் எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் சுலோச்சனாபாய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறந்து விட்ட நிலையில், இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே எனது உடன்பிறந்த சகோதரி கவிதா சிங் இருட்டுக்கடை உரிமையை கைப்பற்றி நடத்தி வருகிறார். இதுதொடர்பாக எங்கள் இருவர் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் உயிலின் உண்மை நகலை சமர்ப்பித்து உள்ளேன். நீதிமன்றம் மூலமாக சட்டப்போராட்டம் நடத்தி இருட்டுக்கடை மற்றும் அதுசார்ந்த சொத்துக்களை மீட்பேன்.

மேலும் எனது அத்தை உயிரோடு இருந்தபோது முழுவதும் கேமரா பொருத்தப்பட்டு அவரை பிக்பாஸ் வீட்டில் வைத்திருப்பதுபோல் வைத்திருந்தனர். யாரும் அவரை சந்திக்க முடியாது. நான் ஒருமுறை சந்திக்க சென்று என்னை சந்திக்க விடாமல் தடுத்து விட்டனர். இதுகுறித்து டவுன் காவல் நிலையத்தில் 31-08-22 அன்று புகார் அளித்துள்ளேன். தற்போது திருமணம் முடிந்த எனது மருமகள் கனிஷ்கா நான் பார்த்து வளர்ந்த பெண். மிக நல்லவள். அவள் மீது அவரது கணவர் வீட்டில் அவதூறு பரப்புகின்றனர். இரு குடும்பத்திற்கும் உள்ள தகராறில் கனிஷ்காவை பலிகடா ஆக்குகின்றனர். கனிஷ்காவின் மாமனார் யுவராஜ்சிங் இருட்டுக்கடை மீது உரிமை கோர முடியாது. எனது சகோதரியுடன் சமாதானமாக செல்ல வாய்ப்பில்லை. நீதிமன்றத்தையும், சட்டத்தையும் நம்புகிறேன். நல்ல தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.