நியூயார்க்: சொத்து மதிப்பை உயர்த்தி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டிரம்ப் மற்றும் அவரது குடும்ப வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் தொழிலின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நிதி அறிக்கைகளில் சொத்துகளின் மதிப்பை மோசடியான முறையில் உயர்த்தியது கண்டறியப்பட்டதாக நியூயார்க் நீதிபதி ஆர்தர் எங்கோரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெட்டிசியா ஜேம்ஸ் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
மோசடி குற்றத்துக்காக அவருக்கு ரூ.2050 கோடி அபராதம் மற்றும் நியூயார்க்கில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி உள்ளார். டிரம்ப் மீதான இந்த வழக்கு விசாரணை நேற்று நியூயார்க் நீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையில் டிரம்ப் நேற்று ஆஜரானார்.நீதிமன்றத்தில் ஆஜராக செல்வதற்கு முன் டிரம்ப் கூறுகையில்,‘‘இது அரசியல் ரீதியான வழக்கு. இது ஒரு ஏமாற்று வேலை. நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் என்னை காயப்படுத்தும் முயற்சியாகும். ஆனால், நாட்டு மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்’’ என்றார்.