கரூர்: சொத்துவரி நிர்ணயம் செய்வதற்கு ₹17,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர், உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பூவம்பாடியை சேர்ந்த குமரேசன் (25), ஜவுளிக்கடையில் வேலை செய்கிறார். இவர் தனது 3 சென்ட் நிலத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன் சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அலுவலக உதவியாளர் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை சேர்ந்த சிவகுமார் (44), ₹13,000 வரி நிர்ணயம் செய்ய வேண்டி உள்ளது.
இதற்கு லஞ்சமாக ₹17,000 சேர்த்து ₹30,000 கொடுக்கும்படி கூறியுள்ளார். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபாலை (45) சந்தித்து பேசியபோது, உதவியாளர் சிவக்குமார் கேட்ட பணத்தை கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குமரேசன், கரூர் மாவட்ட லஞ்சஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். அவர்களது ஆலோசனைப்படி லஞ்ச பணம் ₹17ஆயிரத்தை நேற்று சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராஜகோபால், உதவி அலுவலர் சிவக்குமாரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் நேற்று, முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பதவி உயர்வு பெற்று பணி மாறுதலில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி செல்ல வேண்டியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.