ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் இருந்து உரிமம் இல்லாமல் செம்மண் ஏற்றிவந்த 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் சிறுவனம் புதூர் கிராமத்தில் செம்மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து தமிழகத்திற்கு உரிமம் இல்லாமல் செம்மண் எடுத்து வருவதாக திருவள்ளூர் எஸ்.பி. சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, எஸ்ஐ. பூபாலன் ஆகியோர் ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண் ஏற்றி வந்த 3 லாரிகளை நேற்றுமுன்தினம் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு உரிமம் இல்லாமல் செம்மண் ஏற்றி வந்தது தெரிந்தது. அப்போது ஒரு லாரியின் டிரைவர் மட்டும் தப்பித்து ஓடி விட்டார். இதில், மற்ற 2 லாரிகளின் டிரைவர்களான அரியத்துறையை சேர்ந்த தேவா(23), அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்த வசந்தகுமார்(23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.