சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் 1.1.2023ம் தேதி நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டது. இறுதியாக, கடந்த 14ம் தேதி சுழற்சிப் பட்டியலும் வெளியிடப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் இஎம்ஐஎஸ் இணை தளம் மூலம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 18ம் தேதி 1 முதல் 300 பேருக்கும், 19ம் தேதி 301 முதல் 600 பேருக்கும், மீதம் உள்ளவர்களுக்கு 20ம் தேதியும் கவுன்சலிங் நடக்க உள்ளது.
கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்ட சுழற்சிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றும் தகுதிவாய்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களும் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளனர். இந்த கவுன்சலிங்கில், பதவி உயர்வு ஆணைகள் உடனுக்குடன் வழங்குவதைப் போல தற்காலிக (3 ஆண்டுகள்), நிரந்தர உரிமைவிடல் செய்யும் நபர்களுக்கும், அப்படியே உரிய ஆணைகளை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து, முதன்மைக் கல்வி அலுவலர் சான்றொப்பம் செய்து அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட வாரியாக 742 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த பட்டியலையும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.