சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை எஸ்சி, எஸ்டி பணியாளர் கூட்டமைப்பினர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டின் மாநில அரசு பணிகளில் பணிமூப்பு நிலையை நிர்ணயிக்க இதுவரை பின்பற்றி வந்த 200 பாயிண்ட் ரோஸ்டர் முறையை தடை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையிலான திருத்திய சீனியாரிட்டி பட்டியலை மனிதவளத்துறை வெளியிட்டுள்ளது. இந்த திருத்திய சீனியாரிட்டி பட்டியலால் ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்கள் பலருக்கு பதவி இறக்கம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
திருத்திய சீனியாரிட்டி பட்டியலின் அடிப்படையில் எதிர்காலத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டால், எஸ்சி அரசு ஊழியர்களின் பதவி உயர்வு நிலையானது, நூறு பேருக்கு ஐந்து நபருக்கும் குறைவாகவே இருக்கும். அதே போல எஸ்டி அரசு மத்திய அரசு பணிகள் மற்றும் கர்நாடகா, அரியானா போன்று ஆறு மாநிலங்களில் தற்பொது அரசியல் சாசன கூறு 16(4ஏ) யின் படி பதவி உயர்வு பணிகளில் எஸ்சி/எஸ்டியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கச்சட்டமியற்றி நடைமுறையிலும் உள்ளது. அது போல தமிழக அரசின் பதவி உயர்வு பணிகளிலும் எஸ்சி/எஸ்டி அரசு ஊழியர்களுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த அவசர சட்டமியற்ற வேண்டும். பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவசர சட்டமாக 16(4ஏ)யின் படி தமிழகத்தில் அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை நடைமுறைபடுத்தும் சட்டத்தை இயற்ற கோரிக்கை வைக்கிறோம்.