புதுச்சேரி: விசிக பொதுச்செயலாளர் விழுப்புரம் எம்பி துரை.ரவிக்குமாரின் சகோதரர் நடேசன் (92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திமுக பொதுக்குழு வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த நிகழ்வாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெறக்கூடிய வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார் முதல்வர். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு முதல்வர் தலைமையில் இயங்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூட்டணியில் நடிகர் கமலுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ராஜ்யசபாவில் அவருக்கு ஒரு இடத்தை திமுக தலைவர் ஒதுக்கி தந்துள்ளார்.
ஆனால் அதிமுக வாக்குறுதி கொடுத்ததாக தேமுதிகவினர் கூறுகிறார்கள். அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய இடத்தை ஒதுக்காதது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள், தேர்தலில் விசிக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்படும். தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் விசிகவில் நிர்வாகிகள் மாற்றம் குறித்து திருச்சி பேரணிக்கு பிறகு மறுசீரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பாமகவை ஒருபோதும் போட்டியாக நினைக்கவில்லை
திருமாவளவன் எம்பி கூறுகையில், ‘பாமகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. விசிகவுடன் பாமகவுக்கு எந்தவிதமான போட்டியும் இல்லை. அதனால் வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கு இடமில்லை. எங்கள் களம் வேறு, எங்கள் பயணம் வேறு. நாங்கள் பாமகவை போட்டி கட்சியாக ஒருபோதும் நினைக்கவில்லை. திமுக கூட்டணியில் பாமக வந்தால் விசிக ஆதரிக்குமா? என்ற கேள்விக்கு, இது ஒரு யூகமான கேள்வி. திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்வி. இந்த கேள்விக்கு, இப்போது எந்த அவசியமும் இல்லை’ என்று கூறினார்.