ஆம்ஸ்டெல்வீன்: புரோ ஹாக்கி லீக் போட்டிகள் 2வது கட்டமாக இன்று மீண்டும் துவங்க உள்ளன. ஆண்கள், பெண்கள் என 2 பிரிவுகளில் புரோ ஹாக்கி லீக் ஆண்டு தோறும் நடைபெறும். தரவரிசையில் முதல் 9 இடங்களில் இருக்கும் அணிகள் 2 பிரிவுகளில் களம் காணும். ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான போட்டி நவம்பர் மாதம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் தொடங்கியது. பின்னர், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா நாடுகளில் புரோ லீக் ஆட்டங்கள் தொடர்ந்தன. இந்திய ஆடவர், மகளிர் அணிகள் பங்கேற்ற முதல் கட்ட ஆட்டங்கள் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. தொடர்ந்து 2வது கட்ட எஞ்சிய ஆட்டங்கள் ஸ்பெயினின் வெலன்சியா, நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன், இங்கிலாந்தின் லண்டன், பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப், ஜெர்மனியின் பெர்லின் நகரங்களில் இன்று முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும்.
இந்திய ஆண்கள் அணி: ஆண்கள் பிரிவில் உள்ள 9 அணிகளும் இதுவரை தலா 8 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இங்கிலாந்து 4 வெற்றி, 2 சமன், 2 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பெல்ஜியம் 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்தியா 5 வெற்றி, 3 தோல்விகள் பெற்று 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்தியா இன்னும் 8 ஆட்டங்களில், தலா 2 முறை நெதர்லாந்து, அர்ஜென்டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா நாடுகளுடன் விளையாட வேண்டி இருக்கிறது. இந்திய நேரப்படி இன்று ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து – இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்திய பெண்கள் அணி: பெண்கள் அணிகளும் தலா 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் இன்னும் 8 ஆட்டங்களில் ஆட வேண்டி உள்ளது. இதுவரை நடந்த ஆட்டங்களில் முறையே 19, 17, 16 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் நெதர்லாந்து, பெல்ஜியம், சீனா அணிகள் உள்ளன. இந்திய அணி தலா 2 வெற்றி, டிரா, 4 தோல்விகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 8 ஆட்டங்களில் சீனா, பெல்ஜியம், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இந்தியா தலா 2 முறை மோத உள்ளது. இந்திய நேரப்படி இம்மாதம் 14ம் தேதி மாலை இங்கிலாந்தில் நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் களம் காண உள்ளன.