சென்னை: தடை செய்யப்பட்ட பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, ஆணையர் தீரஜ் குமார் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வணிகர் சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் கூறினர்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: வணிகர்களின் கோரிக்கைகள் குறிப்பெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வரி செலுத்துவதில் எவ்வித தவறும் நடைபெற கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் உமி, தவிடு உள்ளிட்ட பொருட்களுக்கு வரி இல்லை. ஆனால், தவிடு எண்ணைக்கு வரி உள்ளது. இவற்றை பிரித்து பார்ப்பதில் சிக்கல்கள் உள்ளது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதைப்போன்று சரக்குகளை கொண்டு செல்லும் போது அதற்கான இணையவழி கட்டணத்தில் தவறுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வணிகர்கள் தங்கள் புகார் மற்றும் சந்தேகங்களை தீர்க்க இரவு நேர கால் சென்டர் ஏற்பாடு செய்யப்படும். மேலும் வணிகர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.