சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் 6 பேரை, 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக கடந்த மே மாதம் ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் அமீது உசேன், அமீது மன்சூர் என்ற சுவடு மன்சூர், அப்துல் ரகுமான், மவுரீஸ், அகமது அலி உமரி, காதர் நவாஸ் செரீப் என்ற ஜாவித் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவர்கள் தங்களது யூடியூப் சேனல் மூலமாக பயங்கரவாத இயக்கம் தொடர்பான கருத்து களை பதிவிட்டு பிரசாரம் செய்து ஆட்களை சேர்த்து வந்தது தெரியவந்தது. மேலும், சென்னையை போன்று கன்னியாகுமரி மற்றும் கரூர் பகுதிகளிலும் இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் ரகசிய கூட்டம் நடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து, ரகசிய கூட்டம் நடந்த கன்னியாகுமரி, கரூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு 6 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், 6 பேருக்கும் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தும், விசாரணை முடிந்து மீண்டும் 28ம் தேதி 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க கொண்டு சென்றனர். விசாரணைக்கு பிறகு இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது. இந்த அமைப்பில் யாரையெல்லாம் சேர்த்தார்கள், எவ்வாறு இந்த அமைப்பில் ஆட்களை சேர்ப்பதற்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது, எந்த மாதிரியான சதி திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரியவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.