பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது தொடரப்பட்ட வழக்கை விசாரணை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல் சமயத்தில் மாநிலத்தின் விஜயநகர் மாவட்டம், ஹரப்பனஹள்ளி நகரில் 2023 மே 7ம் தேதி நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசும்போது, ‘மாநிலத்திலும் ஒன்றியத்திலும் டபுள் இன்ஜின் அரசாங்கம் இருந்தால், வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடக்கும். தேர்தலில் பாஜ தோல்வியடைந்தால், ஒன்றிய அரசின் மூலம் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் மக்கள் வஞ்சிக்கப்படுவீர்கள்.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தி வரும் கிஷன் சன்மான் நிதி, பிரதமர் அவாஸ் உள்ளிட்ட திட்டங்களை மாநிலத்திற்கு வழங்கமாட்டோம்’ என்பது உள்பட பல கருத்துகளை தெரிவித்ததுடன் குறிப்பிட்ட வகுப்பினரை கவரும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிட்டார். ஜே.பி.நட்டா தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதனிடையில் தன் மீது பதிவு செய்துள்ள புகாரை ரத்து செய்யகோரி நட்டா, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரித்து நட்டா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தாமல் இருக்க ல தடை விதித்து விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.