Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் லாபம் கொழிக்கும் இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள்: பிரபல முதலீட்டு நிறுவனம் பரபரப்பு தகவல்

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் கார்க் தீவு மீதான தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 46 சதவீதம் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளையே சார்ந்திருந்தது. குறிப்பாக, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 40 முதல் 50 சதவீதம் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு வரப்பட்டது.

கத்தார் போன்ற நாடுகளிலிருந்து வரும் எல்என்ஜி எரிவாயு விநியோகமும் சிக்கலான சூழலில் இருந்ததால், இந்திய தொழில் துறையினர் மத்தியில் பெரும் கவலை நிலவி வந்தது. இன்றைய சூழலில் மார்கன் ஸ்டான்லி முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நெருக்கடி இந்தியாவுக்கு சவாலாக இருந்தாலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் ஏவியேஷன் எரிபொருள் விலை கடந்த ஒரு வாரத்தில் 18 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

இதனால் கச்சா எண்ணெய்க்கும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கும் இடையிலான விலை வித்தியாசம் அதிகரித்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. மேலும், இந்தியா தனது நீண்டகால திட்டம் மூலம் தற்போது 70 சதவீத இறக்குமதியை ஹார்முஸ் அல்லாத பிற வழிகளில் மாற்றி அமைத்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் ‘யூரல்ஸ்’ கச்சா எண்ணெயை இந்தியா அதிகளவில் வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக தடை விலக்கு அளித்துள்ளது. இதனால் விநியோகத் தடை தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த 15 நாட்களில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 105 டாலராக உள்ளது.

இதனால் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து ஒரு டாலருக்கு எதிராக 92.14 ரூபாயாக வர்த்தகமாகிறது. இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி கூறுகையில், ‘எல்பிஜி விநியோகத்தில் சில பாதிப்புகள் உள்ளது. இதனால் சில இடங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; இருப்பினும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.