மலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, தானிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப்பகுதியில் ராதாபுரம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் (50), தாய்லாந்து ரகத்தை சேர்ந்த மரவள்ளி பயிரை சாகுபடி செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார். இவரோடு, இவரது மனைவி, 3 மகன்கள், மருமகள்கள் என குடும்பமே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. மரவள்ளி வயலில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கணேசனைச் சந்தித்தோம்.
`
` எனக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 3 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். 3 ஏக்கர் நிலத்தில் தாய்லாந்து ரக மரவள்ளியைப் பயிரிட்டு இருக்கிறேன். 5 ஏக்கர் நிலத்தில் செம்மரம் பயிரிட ஏற்பாடு செய்து வருகிறேன். கடந்த 2 வருடங்களாக இந்த ரக மரவள்ளியைப் பயிரிட்டு வருகிறேன். இது கொஞ்சம் கசப்புச்சுவையோடு இருப்பதால் பன்றிகள் வந்து சேதப்படுத்தாது. மனிதர்களும் நமக்கு தெரியாமல் இதை சாப்பிட மாட்டார்கள். ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஆலை பயன்பாட்டுக்காக இதை வாங்கி செல்கிறார்கள். இதனால் துணிந்து இந்தப் பயிரை சாகுபடி செய்கிறோம்’’ என தாய்லாந்து ரக மரவள்ளி குறித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்து பேச ஆரம்பித்தார் கணேசன்.
“எங்களுக்கு பிரதான தொழிலே விவசாயம்தான். பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். என்னுடன் மனைவி, மகன்கள், மருமகள்கள் எல்லாருமே விவசாயம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் சிறப்பாக விவசாயம் செய்ய முடிகிறது. மற்ற பயிர்களைவிட மரவள்ளி நல்ல லாபம் தருகிறது. தண்டராம்பட்டு வட்டாரத்தில் தாய்லாந்து ரகம் வெள்ளை மற்றும் கருப்பு மரவள்ளிக்கிழங்கு 2000 ஏக்கருக்கு சாகுபடி செய்யப்படுகிறது.
மரவள்ளியை நடவு செய்வதற்கு தை மாத பட்டம்தான் சிறந்த பட்டம். அந்த சமயத்தில்தான் மிதமான வெயில் நிலவும். அந்த சீதோஷ்ண நிலை மரவள்ளி நடவுக்கு ஏற்றதாக இருக்கிறது. மழைக்காலங்களில் நடவு செய்தால் நன்றாக வேர் பிடிக்காது. மரவள்ளியை நடவு செய்ய முதலில் 5 கலப்பை கொண்டு நிலத்தை நன்றாக ஏர் ஓட்டுவோம். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 3 டிப்பர் தொழுவுரமிட வேண்டும். எங்கள் பகுதியில் தொழுவுரம் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் நாங்கள் 3 ஏக்கருக்கும் சேர்த்து 6 டிப்பர் தொழுவுரம்தான் போட்டோம். தொழுவுரம் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலை, தழைகளை போட்டு உழவு செய்தோம்.
உழவு செய்த பின்பு பார் அமைத்து அதில் 2 அடி இடைவெளிகளில் விதைக்கரணைகளை நடவு செய்தோம். நடவுக்கு முன்பு பாசனம் செய்தோம். பாசனம் செய்வதால் எளிதாக நடவு செய்ய முடிகிறது. விதைக்கரணைகளை தானிப்பாடி பகுதியில் உள்ள ஒரு விவசாயியிடம் இருந்து வாங்கினேன். ஒரு விரல் அளவு கொண்ட விதைக்கரணைகளை 1 அங்குல ஆழத்தில் நடுவோம். பூஞ்சாண் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, கார்பன் டாஸ்சின் பூஞ்சான் கொல்லி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து, விதைக்குச்சியை 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் வயல்வெளியில் நடவு செய்ய வேண்டும்.
உயிர் உரக் கரைசலிலும் விதைக்குச்சியை ஊற வைக்கலாம். இதன்மூலம் வயலைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து தழைச்சத்து மற்றும் மண்ணில் உள்ள மணிச்சத்து வேர்களுக்கு கிடைக்க ஏதுவாகிறது. இதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 30 கிராம் பாஸ்போ பாக்டீரியா சேர்த்து, அந்தக் கரைசலில் விதைக்குச்சிகளை 15 நிமிடம் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்த மறுநாளில் வயலில் களைக்கொல்லி தெளிப்போம். இதனால் 1 மாதத்திற்கு களை பிரச்னை இருக்காது.
நடவு செய்த 10, 15 நாளில் தளிர் வரும். அப்போது வாரம் ஒருமுறை சொட்டுநீர் மூலம் பாசனம் செய்வோம். 1 மாதத்திற்கு பிறகு களை வரும். அதை அகற்றுவோம். பின்பு தேவையான நேரத்தில் களையெடுப்போம். மரவள்ளிக்கு அடி உரமாக சூப்பர் பாஸ்ேபட் 3 மூட்டை, டிஏபி ஒரு மூட்டை இடவேண்டும். குச்சி நட்ட பிறகு மேல் உரமாக 5வது மாதத்தில் ஒன்றரை மூட்டை பொட்டாஷ், 4 மூட்டை ஜிப்சம் இடுவோம். 7வது மாதத்தில் ஒன்றரை மூட்டை பொட்டாஷ் இடுவோம். சொட்டுநீர் மூலமாக பயிர் செய்தால் உரங்களை சொட்டுநீர் பைப் மூலம் குச்சிகளுக்கு விடலாம்.
மரவள்ளியில் சிவப்பு சிலந்தி, பேன் தாக்குதல் இருந்தால் அதனைக் கட்டுப்படுத்த டைக்கோபால், ப்ரோ பார்கைட்டு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் ஏதாவது பூச்சி தாக்குதல், நோய் இருந்தால் வேளாண் துறையை தொடர்புகொண்டு உரிய மருந்துகளைத் தெளிப்போம். இவ்வாறு செய்து வர 10 மாதத்தில் கிழங்கு அறுவடை செய்யலாம். நல்ல பராமரிப்பு இருந்தால் 8 மாதத்தில் கூட அறுவடை செய்யலாம். மரவள்ளி ஒரு நீண்ட கால பயிர் என்பதால் ஆரம்ப காலங்களில் ஊடுபயிராக சின்ன வெங்காயம், கீரை, கொத்தமல்லி போன்ற குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து கொள்ளலாம்.எங்களுக்கு பெரும்பாலும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மரவள்ளி அறுவடைக்கு வரும். அந்த சமயங்களில் ஆத்தூர், சின்ன சேலம் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து அறுவடை செய்து கிழங்கை லாரியில் ஏற்றி செல்வார்கள்.
ஒரு ஏக்கரில் சுமார் 15 டன்னில் இருந்து 20 டன் வரை கிழங்கு அறுவடை செய்யலாம். ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ₹10 ஆயிரம் முதல் ₹12 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வதால் எங்களுக்கு விற்பனை எளிதாக முடிகிறது. வியாபாரிகள் வாங்கும் கிழங்குகளை தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு ஏக்கரில் 15 டன் மகசூல் கிடைத்து, டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் விலை கிடைத்தாலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். அதில் உழவு, களை, உரம், மருந்து என அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் செலவானாலும் ரூ.1 லட்சம் லாபமாக கிடைக்கும். குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிராக மரவள்ளிக்கிழங்கு விளங்குவதால் நாங்கள் இதை தொடர்ந்து செய்து வருகிறோம். இதை மற்ற விவசாயிகளும் சாகுபடி செய்து வருமானம் பார்க்கலாம்’’ என பரிந்துரை செய்யும் கணேசன் 20 ஆடு, 10க்கும் மேற்பட்ட கறவை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இதன்மூலம் கூடுதல்
வருவாயும் பெற்று வருகிறார்.
தொடர்புக்கு:
கணேசன் – 90474 56066