திருவனந்தபுரம்: மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரளத்தை சேர்ந்த மஞ்சுமேல் என்கிற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு, குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கிக் கொள்கிறார். உடன் வந்த நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை. மஞ்சுமேல் பாய்ஸ் படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் உலக அளவில் ரூ.200 கோடியை நெருங்கி வருகிறது.
அதே நேரத்தில், டப்பிங் பதிப்பு இல்லாமல், தமிழ்நாட்டில் ரூ.50 கோடி வசூல் செய்த முதல் தமிழ் மொழி அல்லாத திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில், மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஷான் ஆண்டனி, சவ்பின் ஷாஹிர் மற்றும் பாபு ஷாஹிர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவுப்படி 3 பேர் மீதும் மரடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரூரை சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. படத் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. மஞ்சுமேல் பாய்ஸ் படத்துக்கு ரூ.7 கோடி முதலீடு செய்தபோதிலும் லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. லாபம் மட்டுமல்லாமல் முதலீடு செய்த பணத்தைக்கூட திருப்பித் தராமல் ஏமாற்றியதாகவும் சிராஜ் வலியத்தரா குற்றம்சாட்டியுள்ளார்.