விவசாயத்தில் நிச்சயம் சில புதுமைகளைப் புகுத்திப் பார்க்க வேண்டும். அது அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். இதை சில விவசாயிகள் தங்கள் அனுபவத்தில் மெய்ப்பித்து விடுகிறார்கள். அப்படி ஒருவர்தான் திருவண்ணாமலை மாவட்டம் தெய்யார் மடம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன். நெல், மணிலா, கரும்பு என பல பயிர்களைச் சாகுபடி செய்து வரும் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த இவர் தற்போது நிச்சயம் லாபம் தரும் பயிர்கள் எவை என ஆராய்ந்து அவற்றை மட்டும் பயிர் செய்து வருகிறார். தான் விளைவிக்கும் பயிர் செழுமையாக வளர்ந்து, பலன் தர எந்த மாதிரியான முயற்சிகளை எல்லாம் எடுக்க வேண்டுமோ, அவற்றை செய்து பார்க்கிறார். அதில் வெற்றியும் கண்டுவிடுகிறார். தற்போது அவரது வயலில் பப்பாளி, வாழை மற்றும் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. மற்ற வயல்கள் அடுத்த சாகுபடிக்காக தயார் ஆகிவருகின்றன. இதற்காக சணப்பை உள்ளிட்ட பயிர்கள் வளர்ந்து வயலில் பசுமைக்கோலம் போட்டு வைத்திருக்கின்றன. இத்தகைய அழகிய சூழலில் பிரபாகரனைச் சந்தித்தோம்.
“ பாரம்பரிய பயிர்கள், விதைகளை மீட்டெடுக்க வேண்டும்தான். அதேவேளை விவசாயிகள் லாபகரமான விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். விவசாயம் ஒரு லாபம்தான் தொழில்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு தோட்டக்கலைப்பயிர்கள் நிச்சயம் கைகொடுக்கும்’’ என நடைமுறைக்கு ஏற்றவாறு தனது பேச்சைத் தொடங்கிய பிரபாகரன் தொடர்ந்து பேசினார். “ எங்களுக்கு சொந்தமாக 21 ஏக்கர் நிலம் இருக்கிறது. அப்பா பக்தவச்சலம் நல்ல விவசாயி. நான் டிப்ளமோ படித்திருக்கிறேன். சென்னையில் கொஞ்ச காலம் இருந்தேன். 2000வது ஆண்டுக்குப் பிறகு முழுமையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஆரம்பத்தில் கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட மலர்களைச் சாகுபடி செய்தேன். பின்பு பாகல், புடலை, பீர்க்கு உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிட்டேன். 2010-2011ம் ஆண்டில் பப்பாளி பயிர் செய்ய ஆரம்பித்தேன். ஏக்கருக்கு 100 டன் மகசூல் கிடைத்தது.
நல்ல லாபமும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சாகுபடிப் பரப்பை அதிகரித்தேன். 2015-2016ம் ஆண்டில் 15 ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்தேன். அப்போதும் நல்ல விளைச்சல், நல்ல லாபம். இப்போது சில காரணங்களால் 2 ஏக்கரில் பயிரிட்டு இருக்கிறேன்’’ என பப்பாளி சாகுபடியின் மகத்துவம் குறித்து பேசிய பிரபாகரனிடம் பப்பாளி சாகுபடி நுட்பங்கள் குறித்து கேட்டோம்.“ நான் எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும் நிலத்தை நன்றாக தயார் படுத்துவேன். முதலில் சணப்பை உள்ளிட்ட பயிர்களை விதைத்து மடக்கி உழவு செய்வேன். இதன்மூலம் நிலத்திற்கு அபரிமிதமான தழைச்சத்து கிடைக்கும். அதன்படி பப்பாளி சாகுபடிக்கு முன்பு அதாவது சித்திரை மாதத்தில் நிலத்தை நன்றாக உழுது சணப்பையை சாகுபடி செய்தேன். 45 நாட்களில் சணப்பையை மடக்கி உழவு செய்தேன். முதலில் ரோட்டோவேட்டர் கொண்டு ஒரு உழவும், பின்பு டிஸ்க் கலப்பை கொண்டு ஒரு உழவும் செய்தேன். அதன்பிறகு மீண்டும் ரோட்டோவேட்டர் கொண்டு ஒருமுறை உழவு செய்தேன். கடைசி உழவின்போது 2 டிப்பர் தொழுவுரத்தை நிலத்தில் இட்டேன். பின்பு 7X7 அடி இடைவெளியில் பார் அமைத்து அதில் 7 அடிக்கு ஒரு செடி என நடவு செய்தோம். பப்பாளிக்கு பொதுவாக 6X6 இடைவெளி விடுவார்கள்.
நான் இந்த இடைவெளி விட்டிருப்பதால் செடிகளுக்கு இடையே சென்று தாராளமாக பராமரிப்பு பணிகளைச் செய்ய முடிகிறது. காய்ந்த இலைத்தண்டுகளை அகற்ற முடிகிறது. இதனால் எனக்கு கூடுதல் மகசூல் கிடைக்கிறது.நடவுக்குத் தேவையான செடிகளை கோடூர், சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று தரமானதாக வாங்கி வருவேன். நிலத்தில் நன்றாக உழவு செய்து பொலபொலப்பாக மாற்றி இருப்பதால் பெரிய அளவுக்கு குழி எடுக்க அவசியம் இருக்காது. மண்ணை லேசாக தள்ளி செடியை நடவு செய்துவிடலாம். பாரில் சொட்டுநீர்க்குழாய் அமைத்து பாசனம் செய்வோம். நடவுக்கு அடுத்த நாளில் தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து தண்டில் நனைப்போம். 2 நாள் கழித்து 2 கிலோ 19: 19: 19 உரத்தை சொட்டுநீரில் கலந்து கொடுப்போம்.
4 நாள் கழித்து பொட்டாசியம் ஹியூமேட் மருந்தை சொட்டுநீரில் கொடுப்போம். இது வேர் நன்றாக பிடித்து வளர உதவும். அதன்பிறகு 3 நாள் கழித்து 1261 என்ற மருந்தைக் கொடுப்போம். செடி நட்ட 50-55வது நாளில் செடிகளில் பூக்கள் வைக்க ஆரம்பிப்போம். அதன்பிறகு 2 மாதம் கழித்து 2 செடிகளுக்கு இடையில் பள்ளம் தோண்டி 10 கிலோ தொழுவுரம், 300 கிராம் டிஏபி, 150 கிராம் பொட்டாஷ், 50 கிராம் வேப்பம்புண்ணாக்கு, 20 கிராம் மைக்ரோ நியூட்ரிடியன்ட்ஸ் ஆகியவற்றைக் கலந்து இட்டு மண் மூடுவோம். அவை செடிகளுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும். பூ வைத்த பிறகு 90வது நாளில் வயல் முழுக்க பூக்களும், பிஞ்சுகளுமாக இருக்கும். 8வது மாதத்தில் செடியில் காய்களை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். 9வது மாதத்தில் மகசூல் நன்றாகவே இருக்கும். இந்த சமயத்தில் இருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை மேற்சொன்ன உரக்கலவையைக் கொடுப்போம். முதல் பறிப்பில் இருந்து 2 மாதத்திற்கு நல்ல மகசூல் கிடைக்கும். அதாவது அந்த சமயங்களில் ஒரு பறிப்பில் 2 முதல் இரண்டரை டன் மகசூல் கிடைக்கும். 2 மாதத்திற்குப் பிறகு ஒன்றரை டன் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஏறக்குறைய 100 டன் வரை மகசூல் கிடைக்கும். இதனை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். அங்கு ஒரு கிலோ காய்க்கு ரூ.8 முதல் ரூ.14 வரை விலை கிடைக்கிறது. சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.10 விலையாக கிடைக்கும். இதன்மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ.10 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. செடி, நடவு, உரம், பறிப்புக்கூலி உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் ரூ.4 லட்சம் வரை செலவாகும். அதுபோக ஏக்கருக்கு ரூ.6 லட்சம் லாபமாக கிடைக்கும்’’ எனக்கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.
தொடர்புக்கு:
பிரபாகரன்- 82484 50373
கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தின் காய்கறிகளும் விற்பனைக்காக வருகின்றன. அந்தப் பகுதியில் இயற்கை சீற்றங்களால் பப்பாளி விளைச்சல் பாதிக்கும். அந்த சமயங்களில் தமிழகத்தில் விளையும் பப்பாளிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
பப்பாளி சாகுபடிக்கு தரமான கன்று, நல்ல மண்வளம், பராமரிப்பு, சீதோஷ்ண நிலை ஆகியவை முக்கியம். முக்கியமாக காற்று சீராக இருக்க வேண்டும். அதிக காற்று வீசினால் மகசூல் பாதிப்பு ஏற்படும். இதற்காக 3 அடிக்கு ஒன்று அளவில் சவுக்கு மரங்களை சிக்சாக் முறையில் நட்டு பராமரிக்கலாம். அந்த மரங்களை 15 அடிக்கு மேல் வளராதவாறு கவாத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் காற்றுத் தடுப்பானாக சவுக்குமரம் செயல்படும்.
தெய்யார் மடம் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகிக்கும் பிரபாகரன் அங்குள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தி புளியமரம், பலாமரம் உள்ளிட்ட மரங்களை நடவு செய்திருக்கிறார். இதனால் இந்த ஊரை பசுமையான முன்மாதிரி கிராமமாக மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பப்பாளியில் மாவுப்பூச்சி, வெள்ளை அந்துப்பூச்சி போன்ற பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த தையோமெதாக்சிம் மருந்தை லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கப்படுகிறது. இலைக்கருகல் நோய் வந்தால் அக்ரோபேட் மருந்தை லிட்டருக்கு அரை கிராம் வீதம் கலந்து தெளிக்கப்படுகிறது.