திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவிற்கு உட்பட்ட ஊர்தான் இலுப்பாக்கம் பகுதியில் பிரதான சாகுபடிப் பயிர்கள் என்றால் நெல்லும் பாசிப்பயறும்தான். இந்த இரண்டு பயிர்களையும் இயற்கை முறையில் சாகுபடி செய்வதோடு, ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு, பல வகையான பழ மரங்கள் வளர்ப்பு என அசத்தி வருகிறார் விஜயகுமார் என்ற விவசாயி. இதில் பெற்ற அனுபவத்தை வைத்து திருவள்ளூர் மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் இயற்கை விவசாய பயிற்றுநர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். விஜயகுமாரின் ஒருங்கிணைந்த பண்ணைய முறை குறித்து அறிய அவரை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். “பிஏ படித்திருக்கிறேன். ஆனாலும் நான் ஒரு விவசாயி என சொல்வதையே பெருமையாக நினைக்கிறேன். சிறு வயதில் இருந்து அப்பாவுடன் விவசாய நிலத்திற்கு செல்வேன். அப்போதிருந்தே விவசாய வேலைகள் அத்துப்படி. விவசாய வேலைகளுக்கு இடையேதான் படிப்பை மேற்கொண்டேன். அதனால் படிப்பை முடித்தாலும் விவசாயத்தை விடாமல் செய்து வருகிறேன். இன்னும் சொல்லப் போனால் முழு விவசாயியாக இருக்கிறேன். எனக்குச் சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். பனிக்காலங்களில் பாசிப் பயறு பயிரிடுவேன். இதற்கிடையே ஒரு ஏக்கர் நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையாக நிர்வகித்து வருகிறேன்.
கடந்த மாதம்தான் 20 ஏக்கரில் பாசிப்பயறு பயிரிட்டு அறுவடை செய்தேன். ஏக்கருக்கு 100 கிலோ வீதம் 20 ஏக்கருக்கு 2 டன் பாசிப்பயிறு மகசூலாக கிடைத்தது. இந்த முறை எங்கள் பகுதியில் மழை அதிகமென்பதால் ஏக்கருக்கு 3 மூட்டை அதாவது 300 கிலோ வரவேண்டிய மகசூல் குறைந்து ஒரு மூட்டைதான் வந்தது. அதனால் பாசிப்பயறில் குறைந்தளவுதான் லாபம் கிடைத்தது. ஆனால் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அதாவது, எனது பண்ணையத்தில் கடந்த 9 வருடங்களாக கோழி வளர்த்து வருகிறேன். சராசரியாக 300 கோழிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். அதற்கு அதிகமாக கோழிகள் பெருக்கம் அடையும்போது கறியாகவோ, உயிராகவோ விற்பனை செய்துவிடுவேன். அந்த வகையில் வாரம் ஒருமுறை சராசரியாக 8 கிலோ வரை கோழிகள் விற்பனை செய்கிறேன். ஒரு கிலோ கோழி ரூ.450 வரை விற்பனை செய்கிறேன். இதுபோக, தினமும் எனக்கு சராசரியாக 30 கோழி முட்டைகள் கிடைக்கிறது. அந்த வகையில் மாதம் 900 கோழி முட்டைகள் கிடைக்கிறது. ஒரு முட்டை ரூ.15 வீதம் விற்கிறேன். இதில் இருந்து மாதம் ரூ.13,500 கிடைக்கிறது. கோழிகள் வளர்க்கத் தொடங்கியபோது அதனை வளர்ப்பதற்காக ஷெட் அமைத்தேன். பின்பு வளர்ப்புக் கோழிக் குஞ்சுகள் வாங்கினேன். அதுபோக பெரிதாக எனக்கு தீவனச் செலவென்று ஏதுமில்லை. பகல் முழுவதும் மேய்ச்சல் முறையில் கோழிகள் தீவனம் எடுத்துக்கொள்வதால், நான் தனியாக தீவனம் கொடுப்பதில்லை. அந்த வகையில் கோழி வளர்ப்பு தினசரி வருமானத்திற்கும் மாத வருமானத்திற்கும் சிறந்ததாக இருக்கிறது.
அதேபோலத்தான் மீன் வளர்ப்பும். கடந்த 2 வருடமாக 10 சென்ட் நிலத்தில் குட்டை வெட்டி விரால் மீன் வளர்த்து வருகிறேன். மீன்கள் குஞ்சுகளாக இருக்கும்போது வாங்கி வந்து குட்டையில் விட்டுவிடுவேன். அதற்கு தீவனமாக கோழி மற்றும் மாட்டுக் கழிவுகளைப் போடுவேன். கூடுதலாக வாரம் ஒருமுறை தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றைக் கொடுப்பேன். இது மட்டும்தான் மீன்களுக்கு நான் கொடுக்கும் தீவனம். சரியாக ஒரு வருட காலத்தில் இந்த குஞ்சு மீன்கள் அனைத்துமே 2 கிலோ எடையில் வளர்ந்து விடும். அப்போது குட்டையில் உள்ள நீரை வெளியேற்றி மீனை மொத்தமாக பிடித்து விற்பனை செய்து விடுவேன். சராசரியாக தற்போது குட்டையில் 200 குஞ்சுகள் இருக்கும். இவை அனைத்தையும் 2 கிலோ வரை வளர்த்து விற்றால் வருட வருமானமும் கிடைத்துவிடும். இதுபோக, நமது பண்ணையத்தில் பல வகையான பழ மரங்கள் இருக்கு. முள்சீத்தா, மா, தென்னை, கொய்யா, அத்தி என எங்கள் பகுதியில் என்னென்ன பழ மரங்கள் வளருமோ அவை அனைத்தையுமே இங்கு வளர்த்து வருகிறேன். பாசிப்பயறைப் பொறுத்தவரை 70 நாளில் அறுவடைக்கு வந்துவிடும். மீதமுள்ள நாட்களில் நெல் சாகுபடிதான். தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா என பலவிதமான பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். அவற்றை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்து விடுவேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
விஜயகுமார்: 94447 39318.
கிராமங்களில் நாட்டு மீனுக்கு, குறிப்பாக விரால் மீன்களுக்கு நல்ல கிராக்கி. இதனால் பலர் விஜயகுமாரின் வயலுக்கே வந்து விரால் மீன்களை வாங்கிச் செல்கிறார்கள்.
இயற்கை முறையில் விளைவிக்கப் படும் பாரம்பரிய நெல் ரகங்களை அரிசியாக்கி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும் விற்று நல்ல லாபம் பார்க்கிறார்.