விவசாயத்தில் சிலர் எப்போதும் சிக்சர் அடிப்பவர்களாகவே இருப்பார்கள். அப்படி ஒருவர்தான் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசங்கன்னி கிராமத்தைச் சேர்ந்த குப்பன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர் ஜெய்கோ ரக தக்காளியை தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு மாதம் ரூ.2 லட்சத்திற்கு மேல் வருமானம் பார்த்து வருகிறார். அதேபோல பல்வேறு மலர் வகைகளையும் பயிரிட்டு லட்சக்கணக்கில் லாபம் பார்க்கிறார். ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்தோம். “எனக்கு சொந்தமான நிலத்தில் சிலோன் ஜெய்கோ ரக தக்காளி, செண்டுமல்லி, சம்பங்கி, மிளகாய், சாமந்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருக்கிறேன். இதில் ெஜய்கோ ரக தக்காளியை மட்டும் ஒன்றரை ஏக்கரில் நடவு செய்திருக்கிறேன். அதில் எனக்கு மாதம்தோறும் நல்ல வருமானம் வருகிறது’’ என பேசத்தொடங்கிய குப்பன், தக்காளி சாகுபடி குறித்து விளக்கமாக பேச ஆரம்பித்தார்.
“ நடவுக்குத் தேவையான நாற்றுகளை ஒசூர் அடுத்த சூளகிரியில் இருந்து வாங்கி வந்தேன். ஒரு ஏக்கருக்கு 8000 நாற்றுகள் தேவைப்பட்டது. இரண்டு அடிக்கு ஒரு நாற்று என்ற கணக்கில் நடவு செய்தேன். ஒரு பாருக்கும் மற்றொரு பாருக்கும் இடையில் நான்கு அடி இடைவெளி இருக்கும். நடவுக்கு முன்னதாக நான்கு முறை உழவு ஓட்டினேன். பின்னர் அரை அடி குழி எடுத்து நாற்றுகளை நட்டேன். 10வது நாளில் யூனிக் என்ற மருந்தை சொட்டுநீரில் கலந்து தக்காளிச்செடிகளுக்கு விடுவேன். இதன்மூலம் செடி நன்கு வேர் பிடித்து செழிப்பாக வளரத்தொடங்கும். 10 நாட்களுக்கு ஒருமுறை களைகளை அகற்றி, தக்காளிச் செடிகளுக்கே உரமாக போட்டுவிடுவேன். சில வைரஸ் நோய்கள் தக்காளிச் செடிகளைத் தாக்கும்.
அதனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. இதனைத் தவிர்க்க மாதத்திற்கு ஒருமுறை தக்காளிச் செடிகளுக்கு மருந்து தெளிப்பேன்.நடவு செய்த 50வது நாளில் செடிகளில் இருந்து பூக்கள் வரத்தொடங்கும். இதிலிருந்து 20வது நாளில் தக்காளி அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை செய்யப்பட்ட தக்காளியை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வேன். சீசனைப் பொருத்து தக்காளி விலையில் மாற்றம் இருக்கும். தற்போது ஒரு கிலோ தக்காளியை ரூ.20 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். வாரத்திற்கு இரண்டு முறை அறுவடை செய்வேன். ஒரு அறுவடைக்கு ஒரு ஏக்கரில் 1 டன் தக்காளி மகசூலாக கிடைக்கும். ஒரு மாதத்திற்கு தக்காளியில் 1.5 ஏக்கரில் இருந்து மட்டும் ரூ.2.4 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ஏற்றுக்கூலி, பராமரிப்பு செலவுகள் என ரூ.20 ஆயிரம் போக ரூ.2.2 லட்சம் லாபமாக கிடைக்கிறது.
இதுபோக 1.5 ஏக்கரில் சம்பங்கி பயிரிட்டிருக்கிறேன். ஒரு ஏக்கரில் நடவு செய்ய 1000 கிலோ கிழங்கு தேவைப்பட்டது. ஏற்கனவே நான் எடுத்து வைத்திருந்த கிழங்கினையே பயன்படுத்திக் கொண்டேன். 2 க்கு 1.5 என்ற கணக்கில் கிழங்குகளை நடவு செய்தேன். நடவு செய்த 90வது நாளில் பூக்கள் வரத்தொடங்கிவிட்டது. ஒரு சீசனில் எனக்கு 1 டன் வரை பூக்கள் கிடைத்தது. தற்போது 850 கிலோவிலிருந்து 950 கிலோ வரை பூக்கள் கிடைக்கிறது. ஒரு கிலோ சம்பங்கியை ரூ.300 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். சராசரியாக எனக்கு 1.5 ஏக்கரில் ஒரு மாதத்திற்கு சம்பங்கியில் இருந்து மட்டும் ரூ.4.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ரூ.30 ஆயிரம் செலவு போக ரு.4.2 லட்சம் லாபமாக கிடைக்கிறது.இரண்டு ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டு இருக்கிறேன். நடவு செய்த 3வது மாதத்தில் பூக்களைப் பறித்து விற்பனை செய்யத் தொடங்கிவிட்டேன். செண்டுமல்லியில் இருந்து மட்டும் ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் டன் பூக்கள் கிடைக்கிறது. இதனை ரூ.50 லிருந்து ரூ.100 வரை சீசனைப் பொருத்து விற்பனை செய்கிறேன். சராசரியாக ரூ.70க்கு விற்பனை செய்கிறேன். செண்டுமல்லி மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவு ரூ.20 ஆயிரம் போக ரூ.2.8 லட்சம் லாபமாக கிடைக்கிறது.
கோலாரில் இருந்து சாமந்தி நாற்றுகளை வாங்கி வந்து 1.5 ஏக்கர் நிலத்தில் நட்டிருக்கிறேன். மாதத்திற்கு ஏக்கருக்கு 2 டன் பூக்கள் கிடைக்கிறது. ஒரு கிலோ பூவினை சந்தையில் ரூ.180 லிருந்து ரூ.220 வரை விற்பனை செய்கிறேன். இதன்மூலம் 1.5 ஏக்கரில் ஒரு மாதத்திற்கு ரூ.5.50 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ரூ.35 ஆயிரம் செலவுகள் போக 5.15 லட்சம் லாபமாக கிடைக்கிறது. அனைத்து மாதமும் பூச்செடிகளில் இருந்து நல்ல மகசூல் கிடைக்காது. தோதான சீசனில் இந்த வருமானம் கிடைக்கும். அதாவது வருடத்திற்கு 7 மாதங்கள் நல்ல மகசூல் கிடைக்கும். அப்போது நல்ல லாபம் பார்த்துவிடலாம்’’
என்கிறார்.
தொடர்புக்கு:
குப்பன் – 94423 11616
*தண்ணீர் மிச்சமாகிறது. வேலையாட்கள் குறைவாகவே தேவைப்படுவதால் கூலி மிச்சம் ஆகிறது.
* தக்காளிக்கு வேளாண்துறை சிபாரிசு செய்யும் உரம் மற்றும் மருந்துகளை சொட்டு நீரில் கலந்து பாய்ச்சுவதால், மருந்து தெளிப்பதற்காக இயந்திரத்தை சுமக்கும் பணியும் மிச்சமாகிறது.
*தனது நிலத்தில் பயிரிட்டிருக்கும் பயிர்கள் அனைத்திற்கும் சொட்டுநீர் மூலம் பாசனம் செய்வதால் பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கின்றன என்கிறார் குப்பன்.