Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேராசிரியர் இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.5.2025) தலைமைச் செயலகத்தில், பேராசிரியர் தி. இராசகோபாலன் அவர்கள் எழுதிய "கலைஞரின் பேனா" நூலினை வெளியிட்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் இராசகோபலன் அவர்கள், முரசொலி செல்வம் அவர்களின் வகுப்புத் தோழர், திராவிடர் மாணவ முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர் ஆவார். அவர் ஆண்டுதோறும் ஆழ்வார்கள் ஆய்வு மையக் கூட்டங்களை சிறப்பாக நடத்துகின்ற பாங்கினை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பாராட்டியுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சித்திற ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள் முதலியவற்றை குறித்து இந்நூலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை தொண்டால் தொட்டவர்கள் உண்டு; அவரைக் கலையால் தொட்டவர்கள் உண்டு; ஆனால், கலைஞருடைய பேனாவைத் தொட்டு, அவரது நெஞ்சைத் தொட்டவர் நூலாசிரியர். "கலைஞருடைய எழுத்துக்கள் எனக்குப் பிராணவாயுவாகிப் போனதால், அவற்றைப் பதிவு பண்ணும் ஒலிப்பதிவு கருவியானேன்" என்கிறார் நூலாசிரியர்.

இந்நூலில், கலைஞர் தம் வாழ்நாளில் நேரம் காலம் இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தார்; அதனால்தான் அவருடைய எழுத்துக்கள் நேரம் காலம் இன்றி வாழ்கின்றன என்றும், பண்டித ஜவகர்லால் நேரு, இராபர்ட் ப்ராஸ்ட்டினுடைய கவிதையை எழுதி தம் மேஜை மீது வைத்திருந்தார். ஆனால், கியூபாவின் அதிபர் திரு. பெடல் காஸ்ட்ரோ அவர்கள் 20.01.2006 அன்று கலைஞர் அவர்கள் எழுதிக் கொடுத்த கவிதையை ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்த்துத் தம் மேஜையின் மீது வைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகத்துக் கவிஞர்களின் எழுத்துக்களை ஒப்பிட்டால், எழுத்துக்களோடு முத்தமிழறிஞரின் மற்றவர்களுடைய எழுத்துக்கள் மலையடி வாரத்தில் நடக்கின்றன. ஆனால், கலைஞரின் எழுத்துக்கள் மலையின் சிகரத்தில் உயர்ந்து நிற்கின்றன என்றும், கலைஞருடைய நாவும் பேனாவும் ஒரே உறையில் கிடக்கும் இரண்டு வாள்கள். கலைஞர் தம்முடைய எழுத்துப்பணியைப் புதுச்சேரியிலிருந்து வெளிவந்த பத்திரிகையில் தொடங்கினார். அந்த முதல் கட்டுரைக்கு "அந்தப் பேனா" எனப் பெயரிட்டிருந்தார். அதனால் இந்த நூலுக்கு "கலைஞரின் பேனா" எனத் தலைப்பிடப்பட்டதாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலையே உச்சி முதல் பாதம் வரை அளந்தது. கலைஞருடைய பேனா என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்துப் பணியை இந்நூல் போற்றிப் புகழ்கிறது.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்னியூர் சிவா. இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. சுகி சிவம், கற்பகம் புத்தகாலயத்தின் திரு. நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.