பகுதி 8
“மகத்துவமிக்க மத்வ மகான்கள்’’ என்னும் பகுதியில், ஸ்ரீ மத்வாச்சாரியார் அவர்களின் சீடர்களான ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவ தீர்த்தர், என்று பல மகான்களின் மகத்துவங்களை வரிசையாகக் கண்டுவருகிறோம். அடுத்ததாக, இந்த எட்டாவது தொகுப்பில் நாம் காணவிருக்கும் மகான், ஸ்ரீ கவிந்திர தீர்த்தர்
இரு மகான்களும் சகோதரர்கள்
ஸ்ரீ கவிந்திர தீர்த்தரின் குரு, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர். ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரின் பூர்வாஷ்ரமத்தில் (துறவியாக தீட்சை பெறுவதற்கு முன்பு) ஸ்ரீ கவிந்திர தீர்த்தருக்கு சகோதரர் ஆவர். அதாவது, சென்ற இதழில், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கு இரண்டு சீடர்கள் என்றும் ஒருவர் ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், மற்றொருவர் ஸ்ரீ கவிந்திர தீர்த்தர் என்றும் பார்த்தோம். ராஜேந்திர தீர்த்தரும் – கவிந்திர தீர்த்தரும் சகோதரர்கள்.
ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் புதியதாக வியாசராஜ மடத்தை ஸ்தாபிக் கிறார். ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திர மடத்தை ஸ்தாபிக்கிறார்.
பேராசிரியர் தாஸ்குப்தா எழுதிய நூல்
இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞரான, பேராசிரியர் தாஸ்குப்தாவால் எழுதப்பட்ட “இந்திய தத்துவத்தின் வரலாறு’’ The History of Indian Philosophy (1921) என்ற நூலில், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் துவைத தத்துவத்தைப் பற்றியும், அவரின் சில முக்கிய சீடர்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீ கவிந்திர தீர்த்தரைப் பற்றி மிக அழகாக வர்ணிக்கிறது, அந்த புத்தகம். அதில் சிலவற்றைப் பார்ப்போம்.
13-ஆம் நூற்றாண்டு துறவி
ஸ்ரீ கவிந்திர தீர்த்தரின் பூர்வாஷ்ரம பெயர் (இயற்பெயர்) “ஸ்ரீ விஷ்ணுதாசாச்சார்யார்’’ ஆகும். மடத்தின் முழு சமஸ்தானமும் ஒன்றுகூடி மிகப் பெரிய விழா நடத்தி, ஸ்ரீ விஷ்ணுதாசாச்சார்யாருக்குப் பட்டம் சூட்டினார்கள். சந்நியாசம் எடுத்த பின்னர், “ஸ்ரீ கவிந்திர தீர்த்தர்’’ என்ற பெயரை எடுத்துக் கொண்டார். தத்துவ விவாதங்களில் வல்லவர். பகவான் ஸ்ரீ அனுமனின் மீதும், மத்வரின் மீதும் அதீத பக்திகொண்டிருந்தார். தினமும் அனுமாருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் வேத பாராயணம் செய்யும் வழக்கம் தான் சந்நியாசம் தீட்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பே கவிந்திர தீர்த்தருக்கு இருந்திருக்கிறது. கவிந்திர தீர்தரால் தெற்கு இந்தியா என்று சொல்லப்படும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், இன்றைய தெலுங்கானா மாநிலம் ஆகியவை துவைத சித்தாந்தம் இவரால் வலுவடைந்தது.
தத்துவ சாஸ்திரங்களில் ஆழ்ந்த நிபுணராக இருந்தவர், நேர்மை, ஞானம், பக்தி மூலமாக தனக்கு பின் வருவோருக்கு வழிகாட்டியாக மாறினார், கவிந்திர தீர்த்தர். இவர் பிறந்த ஆண்டு மற்றும் இடம் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லாதபோதிலும், 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று ஒரு தரப்பினரால் நம்பப்படுகிறது. மேலும், ஸ்ரீ கவிந்திர தீர்த்தரை பற்றி “மத்வ விஜயம்’’, “பூர்ணபிரஜ்ஞ விஜயம்’’ போன்ற நூல்களில் காணலாம். “வரதரத்னாவளி’’ (Varadarathnavali) என்னும் மத்வ சித்தாந்தத்தை பற்றி கூறும் மிக முக்கிய நூலை, ஸ்ரீ கவிந்திர தீர்த்தர் இயற்றியுள்ளது மத்வ சாம்ராஜியத்திற்கே பெருமையாக பார்க்கப்படுகிறது. இவர் படைத்த இந்த “வரதரத்னாவளி’’, ஆழமான படைப்பாகும். “வரதரத்னாவளி’’ நூலை ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், துறவியாகத் தொடங்குவதற்கு முன்பே இயற்றிவிட்டார்.
ஆனேகுந்தியில் பிருந்தாவனம்
தோராயமாக 1333 – ஆம் ஆண்டு முதல் 1398 – ஆம் ஆண்டுகள் வரை ஸ்ரீ கவிந்திர தீர்த்தர் வாழ்ந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் என்று கூறப்படுகிறது. தனது 65வது வயதில், கர்நாடக மாநிலம் அம்பிக்கு அருகில் உள்ள ஆனேகுந்தியில், துங்கபத்ரா நதிக்கரை அருகில் பிருந்தாவனமானார். இவருடன், ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ கவீந்திர தீர்த்தர்,ஸ்ரீ வாகீச தீர்த்தர், ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், ஸ்ரீ சீனிவாச தீர்த்தர், ஸ்ரீ ராமதீர்த்தர், ஸ்ரீ ரகுவார்ய தீர்த்தர், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர், ஸ்ரீ கோவிந்த உடையார் போன்ற ஒன்பது (கவிந்திரரையும் சேர்த்து) மூல பிருந்தாவனம் ஆனேகுந்தியில் உள்ளது. ஒன்பது மூல பிருந்தாவனம் இங்கிருப்பதால், இந்த இடத்தை “நவ பிருந்தாவனம்’’ என்றும் அழைப்பர்.
மிகக் குறைந்த வயதில் பிருந்தாவனம் ஆகியிருந்தாலும், ஸ்ரீ கவிந்திர தீர்த்தரின் சாதனைகளோ.. மிகப் பெரியது. துவைத சித்தாந்தத்திற்கு இவர் ஆற்றிய பணி ஈடுஇணையில்லாதது.
இவரை அனுதினமும் வேண்டிக் கொண்டால் ஞான, பக்தி, வைராக்கியத்தை தந்தருளி, மோட்சத்திற்கு வழிவகை செய்கிறார், என்கிறது பேராசிரியர் தாஸ்குப்தா எழுதிய இந்திய தத்துவத்தின் வரலாறு என்னும் அந்த நூல்.
அவருக்கு பின் வாகீச தீர்த்தர்
துவைத வேதாந்தத்தை மக்களுக்கு எடுத்துச் சென்றவர்களில் கவிந்திர தீர்த்தரின் பங்கு அளப்பரியது என்று பார்த்தோம். துவைதத் தத்துவ விளக்கங்களைத் தெளிவாகக்கூறி மக்களிடையே எடுத்துச் சென்றிருக்கிறார். மேலும், மத்வாச்சார்யார், ஜெயதீர்த்தர், விஜயேந்திர தீர்த்தர், கவிந்திர தீர்த்தர், வியாசராஜ தீர்த்தர், ராகவேந்திர தீர்த்தர் எனும் பரம்பரை மிகப் பிரபலமானது. அன்றைய காலகட்டத்தில் சஞ்சாரம் (ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பக்தர்களை அருள்வது) செய்வதென்பது மிகவும் கடினமான ஒன்று. அதனை, அவரின் காலம் முழுவதிலும் சஞ்சாரம் மேற்கொண்டிருக்கிறார் என்பது, அவரின் தவவலிமையைக் காட்டுகிறது. தனக்கு பின், ஸ்ரீ வாகீச தீர்த்தருக்குப் பட்டத்தைக் கொடுத்தார்,
ஸ்ரீ கவீந்திர தீர்த்தர்.
பிரபலமான ஸ்லோகம்
மகான் ஸ்ரீ கவிந்திர தீர்த்தரின் மீது ஒரு பிரபலமான ஸ்லோகம் ஒன்று உள்ளது. அவை;
“விந்த்ரரூத பதசக்தம் ராஜேந்திர முனிசேவிதம்
ஸ்ரீ கவிந்த்ரமுனிம் வந்தே பஜதாம் சந்த்ரசன்னிபம்’’
(‘‘vindrarudhapadasaktam rajendramunisevitam
shrikavindramunim vande bhajatam candrasannibham’’)
இதன் பொருள்
“இந்திரனும் ருத்ரனும் வணங்கும் திருப்பாதங்களை அடைந்தவராக,
ராஜேந்திர முனிகளால் சேவிக்கப்
பட்டவராகிய
சந்திரனின் ஒளியை ஒத்த ஒளிவிழிப்புடன்
அனுசரிக்கின்றவர்களுக்கு அருள்
புரிபவரான
ஸ்ரீ கவிந்திர முனியை நான் வணங்குகிறேன்’’
– என்பதாகும்.
இன்னும் ஆழமாகப் பதம் பிரித்து ஸ்லோகத்தின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வோமா…விந்த்ரரூத பதசக்தம் (vindrarudha-pada-saktam) – இந்திரன் மற்றும் ருத்ரன் ஆகியோர் வணங்கும், திருப்பாதங்களைக் கொண்டவர்.ராஜேந்திர முனிசேவிதம் (rajendra-muni-sevitam) – மகா முனிவரான ராஜேந்திர முனியால் பூர்வத்தில் சேவை செய்யப்பட்டவர்.
ஸ்ரீ கவிந்த்ரமுனிம் (shri kavindra munim) – புனிதமான கவிந்திர முனி.
வந்தே (vande) – நான் வணங்குகிறேன்.பஜதாம் சந்த்ரசன்னிபம் (bhajatam chandra-sannibham) – பக்தர்களுக்குத் திகழும் சந்திரன் போல் அமைதியும் அருளும் உள்ளவர்.
எப்படி போவது? நவபிருந்தாவனம் என்னும் இடம், துங்கபத்ரா நதியில் அமைந்துள்ளது. அது துவைத தத்துவத்தை பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான தீர்த்த யாத்திரைத் தலம். நவபிருந்தாவனம், கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தி அருகே உள்ள ஒரு சிறிய தீவு ஆகும். ஆனேகுந்தி, கங்காவதியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. ஆனேகுந்தியிலிருந்து துங்கபத்ரா நதியை படகில் கடந்து நவபிருந்தாவனத்தை அடையலாம். நவபிருந்தாவனத்தை பூஜை செய்யும் அர்ச்சகர்கள், தினமும் அதிகாலை 7 மணிக்கு, ஆனேகுந்தியிலிருந்து படகுகளில் பயணம் செய்து நவபிருந்தாவனத்திற்கு வந்து அபிஷேகம் செய்துவிட்டு, மதியத்திற்கு முன்பே திரும்பிவிடுவார்கள். ஆகையால், அவர்களுடனும்கூட பயணத்தை மேற்கொள்ளலாம்.
நவபிருந்தாவனத்திற்கு செல்ல மற்றொரு வழி, ஹம்பி என்னும் ஊரில் இருந்தும் பயணிக்கலாம். பெல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பெட்டிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது, ஹம்பி. ஹம்பியில் இருந்து மீண்டும் துங்கபத்ரா நதியைக் கடந்து நவபிருந்தாவனத்தை அடையலாம்.
(அடுத்த இதழில்.. ஸ்ரீ கவிந்திர தீர்த்தரின் சகோதரரான ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரைப் பற்றிப் பார்ப்போம்…)
தொகுப்பு: ரா.ரெங்கராஜன்