சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கருணா (எ) கருணாகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கு தொழில் ரீதியாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2011 நவம்பர் 16ம் தேதி கருணா தனது அலுவலகத்தில் தனியாக இருந்தபோது, வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்த அரும்பாக்கம் ராதா (எ) ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் அவரை வெட்டி கொன்றனர். புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வெங்கடேசன், அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன், சந்திரசேகர், அசோக்குமார், பாபு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.தஸ்னீம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
விசாரணை காலத்தில் வெங்கடேசன் இறந்ததால் மீதமுள்ள 4 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் கொலை வழக்கில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன், சந்திரசேகர், அசோக்குமார், பாபு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், கூட்டு சதி பிரிவில் 4 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், சட்டவிரோதமாக கூடுதல் பிரிவில் 4 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனை பெற்ற 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.