கேரளத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், ஏறக்குறைய கேரளாவைப்போலவே காட்சியளிக்கும். இந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் ரப்பர் விவசாயம் அதிகளவில் நடக்கும். கிழக்குப் பகுதியில் தென்னை விவசாயம் நடக்கும். தென்னை மட்டுமே சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேங்காயில் எண்ணெய்ச் சத்து அதிகம் இருக்கும். மேலும் சில சிறப்புகளும் இருக்கின்றன. இதனால் குமரி மாவட்ட தேங்காய்க்கு பிற மாவட்டங்களில் மவுசு கூடுதலாக இருக்கும். இதனால் இங்குள்ள விவசாயிகள் தென்னையை விரும்பி சாகுபடி செய்கிறார்கள். அதன்படி நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை
பகுதியில் தென்னை சாகுபடி செய்து அசத்தலான லாபம் பார்த்து வரும் ராமலிங்கம் என்ற விவசாயியை சந்தித்தோம்.
“குமரி மாவட்டத்தில் ரப்பர், தென்னையைப் போல வாழை சாகுபடியும் அதிகளவில் நடந்துவருகிறது. குமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு கேரளாவில் நல்ல சந்தை மதிப்பு இருக்கிறது. இந்தப் பொருட் களின் தேவையும் அங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் இங்குள்ள வாழை விவசாயிகளிடம் இருந்து வாழைக்குலைகளை (வாழைத்தார்) விலைக்கு வாங்கி, அவற்றைக் கேரளாவிற்கு அனுப்பி வியாபாரம் செய்தேன். அதோடு வாழை இலைகளையும் விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்தேன். வாழை இலைகளை வீட்டில் நடைபெறும் விசேசங்கள் மற்றும் ஓட்டல் பயன்பாட்டுக்கு வாங்குவார்கள். இதனால் இந்தத்தொழில் நன்றாக போனது. சுமார் 40 வருடம் இந்தத் தொழிலில் ஈடுபட்டேன். ஒருகட்டத்தில் தொழில் செய்தது போதும், நமது நிலத்தில் விவசாயம் பார்ப்போம் என்ற மனநிலை வந்துவிட்டது. இப்போது முழுநேர விவசாயியாக மாறி இருக்கிறேன். பறக்கை பகுதியில் இரண்டரை ஏக்கர், சுவாமித்தோப்பு பகுதியில் 1 ஏக்கர், தேரூரில் ஒன்றேகால் ஏக்கர் என தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதுதவிர பறக்கை, தெங்கம்புதூர் பகுதியில் ஆறரை ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறேன். மேற்சொன்ன 3 இடங்களிலும் 400 தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் அனைத்தும் நாட்டு ரகங்கள். இந்த மரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். இந்த மரங்கள் சாகுபடி செய்து 5 வருடம் கடந்த பிறகுதான் காய்க்கத் தொடங்கும். ஆனால் நன்றாக பராமரித்து வந்தால், தலைமுறை கடந்தும் காய்ப்பு கொடுக்கும்.
இங்குள்ள தென்னை மரங்களுக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் உரம் வைப்பேன். அதாவது ஒரு தென்னை மரத்திற்கு ஒரு பெட்டி மாட்டுச்சாணம் வைப்பேன். அது சுமார் 30 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த மாட்டுச்சாணத்தை தென்னை மரத்தைச் சுற்றி குழிதோண்டி, குழியினுள் போட்டு மண்ணை மூடிவிடுவேன். அதன்மேல் டிஏபி உரம் ஒரு தென்னைக்கு ஒரு கிலோ வீதம் போடுவேன். இவ்வளவுதான் உரம். உரம் வைத்த பிறகு தண்ணீர் பாய்ச்சுவேன். மழை இல்லாவிட்டால் 4 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வேன். இதற்காக பறக்கையில் உள்ள தென்னந்தோப்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமித்தோப்பு, தேரூர் பகுதியில் ஆற்றுப்பாசனம் மூலம் தென்னை மரங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனது தோப்பில் உள்ள தென்னை மரங்களில் இருந்து வருடத்திற்கு 6 முறை மகசூல் கிடைக்கும். 3 தோப்புகளில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் தேங்காய் கிடைக்கும். இதன்மூலம் வருடத்திற்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால் இதில் பாதிக்கும் மேல் செலவாகிவிடும். 3 தென்னந்தோப்பிற்கும் வருடத்திற்கு உரத்திற்காக ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை செலவு ஆகும். இதனைத் தவிர தென்னந்தோப்புகளில் உள்ள புற்களை அகற்றி பராமரிக்க ரூ.25 ஆயிரம் வரை ஆகும். இதனைத் தவிர தேங்காய் அறுவடை செய்பவர்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். இந்த செலவுகள் எல்லாம் போக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
எஸ்.ராமலிங்கம்: 98940 70004.
உப்புக்காற்று
குமரி மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு கேரள வாடல் நோய், வெள்ளைப் பூச்சி தாக்குதல் ஆகியவை பெரிய அச்சுறுத்தலைக் கொடுக்கும். பறக்கை பகுதியானது கடற்கரையையொட்டி அமைந்துள்ளதால் இப்பகுதியில் உப்புக்காற்று வீசும். இதனால் தென்னந்தோப்புகளில் நோய்த் தாக்குதல் குறைவாக இருக்கிறது. மேலும் இங்கு நாட்டு ரக மரங்களை நட்டு இருப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாக இருந்து வருகிறது. இருந்தபோதும் ராமலிங்கத்தின் தென்னந்தோப்பில் நடவு செய்யப்பட்ட சில இளம் தென்னை மரங்களை ஒருசமயம் கேரள வாடல் நோய் தாக்கி இருக்கிறது. அப்போது தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தினர். இதனால் சுமார் 10 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
ஊடுபயிராக வாழை
பறக்கையில் உள்ள இரண்டரை ஏக்கர் தென்னந்தோப்புகளின் இடையே ஊடுபயிராக ரசகதலி ரக வாழையைப் பயிரிட்டிருக்கிறார் ராமலிங்கம். மொத்தம் 300 வாழைக்கன்றுகள் உள்ளன. இந்த வாழைகளுக்கென்று தனியாக பராமரிப்பு தேவைப்படாது. தென்னைகளுக்கு உரம் மற்றும் தண்ணீர் கொடுக்கும்போது வாழைக்கும் சேர்ந்துவிடுகிறது. இதனால் வாழைகள் மூலம் ஒரு நல்ல வருமானம் கிடைக்கிறது.