சென்னை: தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெஃப்சி- க்கு எதிராக ஒரு சங்கத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அமைத்துள்ளது. இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்க கூடிய திரைப்படங்களில் ஃபெஃப்சி அமைப்பில் உறுப்பினர்களாக இருக்ககூடிய யாரும் பங்கேற்க்க கூடாது என ஃபெஃப்சி அமைப்பு சார்பில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பபட்டது. இதனால் படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்துவந்தார். கடந்த ஜூன் 30-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் இடையே உள்ள பிரச்சனைகளை பேசி தீர்க்க மத்தியஸ்தராக யாரை நியமிக்கலாம் என இரு தரப்பிலும் கலந்து பேசி முடிவை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் பிரச்சனைக்கு மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை நியமிக்கலாம் என இருதரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகான ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவிட்டார். அப்போது திரைப்பட தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையானது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு ஃபெப்சி தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த உத்தரவும் பிறபிக்க முடியாது என நீதிபதி குமரேஷ்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.