சென்னை: சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் சோதனை முடிந்த நிலையில், ரூ.16 கோடி கொடுத்த விவகாரத்தில் தொழிலதிபர் பாலாஜி வீட்டில் 2வது நாளாக விடிய விடிய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரும் சினிமா தயாரிப்பாளரான பாலாஜி(48) என்பவர் கடந்த 2020ம் ஆண்டு நண்பரான சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் என்பவரிடம், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க ரூ.16 கோடி கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை ரவீந்தர் சந்திரசேகரன் முதலீடு செய்யாமல் ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் படி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை கடந்த ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேநேரம் ரூ.16 கோடி பணத்திற்கு எந்த வித ஆவணங்களும் இல்லாமல் தொழிலதிபர் பாலாஜி தயாரிப்பாளர் ரவீந்தர சந்திரசேகரனிடம் கொடுத்தது விசாரணையின் மூலம் உறுதியானது.
அதை தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தனர். அதில் பணம் கொடுத்த தொழிலதிபர் பாலாஜி ரூ.16 கோடி பணத்திற்கு வருமான வரித்துறையிடம் எந்த வித கணக்குகளும் காட்டப்படவில்லை என்றும், அதேநேரம் ரூ.16 கோடி பணத்தை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம் கொடுத்ததாக அதற்கான ஆவணங்களை புகார் அளிக்கும் போது போலீசாரிடம் அளித்துள்ளார். இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் நேற்று அசோக் நகர் 19வது அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீடு மற்றும் அசோக் நகர் 12வது அவென்யூரில் உள்ள அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்ஷன்’ அலுவலகத்தில் நேற்று இரவு 11.30 மணி வரை சோதனை நடந்தது.
இந்த சோதனையில் ரூ.16 கோடி பணத்தை சினிமா மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்த ஆவணங்கள் பல சிக்கியது. மேலும், ரவீந்தர் சந்திரசேகரன் நடிகை மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்ய ரூ.16 கோடியில் ஆடம்பரமாக செலவுகள் செய்ததற்கான ஆவணங்கள் பல சிக்கியது. அதேநேரம், மின்சார உற்பத்தி நிறுவனத்திற்காக முதலீடு செய்த ரூ.16 கோடி கொடுத்த பாலாஜி வசிக்கும் கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் லட்சுமிவதனா தெருவில் உள்ள வீடு மற்றும் ரூ.16 கோடி வங்கி மூலம் பணம் பரிமாற்றம் செய்ய உதவிய சென்னை வடபழனி மன்னார் தெருவில் உள்ள பத்மசுந்தரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் சக்திய சர்க்கார் வீட்டிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் வங்கி மேலாளர் சக்திய சர்க்கார் வீட்டில் நேற்று இரவு 9 மணிக்கு சோதனை முடிவடைந்தது. ஆனால் தொழிலதிபரான பாலாஜி வீட்டில் விடிய விடிய 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் தொழிலதிபர் பாலாஜி வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், லாக்கர் சாவிகள் பல கைப்பற்றி சோதனையின் இடையே தொடர்ந்து அதிகாரிகள் பாலாஜியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை நடந்து வரும் தொழிலதிபர் நடிகர் சிம்பு வைத்து ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.