புதுடெல்லி: இந்தியா தனது விமான படையின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில் கண்ணுக்கே தெரியாமல் (ஸ்டெல்த்) தாக்குதல் நடத்தும் 5ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி விமானத்தின் முன் மாதிரிகளை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், நவீன நடுத்தர போர் விமானத்தின் ஐந்து முன்மாதிரிகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேஜாஸ் போர் விமானங்களுடன், நவீன நடுத்தர போர் விமானங்களும் இந்திய விமான படையின் தாக்குதல் பிரிவில் இடம் பெற்று இருக்கும். நவீன போர் விமானத்தின் முன் மாதிரிகளை உருவாக்குவதில் சிறந்த இந்திய நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். விமானத்தின் முன்மாதிரிகளை உருவாக்குவதில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் அனுபவம் கொண்ட நிறுவனங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.