சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் பெண்களுக்கான ஒப்பனை அறை, கழிவறை, தாய்ப்பால் ஊட்டும் அறையுடன் கூடிய நடமாடும் ஒப்பனை அறை வாகனங்களை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வந்தாரை வாழவைக்கும் சென்னை என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புறங்கள் மற்றும் நகர் பகுதிகளில் இருந்து படித்த பெண்கள் பலர் பணி நிமித்தமாக சென்னைக்கு வருகின்றனர். சொந்த ஊரிலிருந்து பல்வேறு இடங்களுக்கு அவர்கள் புலம் பெயர்ந்து செல்கின்றனர்.
குறிப்பாக, பணிக்காக அதிக அளவில் பெண்கள் சென்னையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலைக்காகவும், கல்விக்காகவும் பெண்கள் சென்னைக்கு வருகின்றனர். இத்தகைய சூழலில் பொது இடங்களில் பெண்களுக்கான கழிவறை பிரச்னைகள் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொது இடங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பகுதிகளில் கழிவறைகள் இல்லாமல் பெண்கள் இன்னல்களுக்கு ஆளாவதை நாம் பார்த்திருப்போம்.
அப்படியே பொது கழிவறைகள் இருந்தாலும் அதனைப் பயன்படுத்த முடியாத நிலையிலும், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாலும் பெரும்பாலான பெண்கள் அந்த கழிவறைகளை பயன்படுத்துவதே கிடையாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண்கள் கழிவறைகளுக்கு செல்ல முடியாமல் கடினமான சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும், திருமணமாகி கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாமல் அவதிப்படுவது அதை விட கொடுமையான ஒன்று. சென்னைக்கு வரும் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அவசரப் பணிக்காக வெளியில் செல்லும் பெண்களுக்காகவே சென்னையில் முதன் முதலாக பெண்களுக்கென நடமாடும் ஒப்பனை அறையுடன் கூடிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போதுமான அளவிற்கு கழிப்பறைகளை பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்னும் நோக்கில் சென்னை மாநகராட்சி பொது கழிவறைகளை நவீன வசதிகளுடன் மாற்றம் செய்தும், பல இடங்களில் புதிய ஒப்பனை அறைகள் என்ற பெயரில் நவீன கழிவறைகளை ஏற்படுத்தி வருகிறது. இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒப்பனை அறைகளை பலர் முறையாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தான் தற்போது, நடமாடும் ஒப்பனை அறை பெண்களுக்காக சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் முதன் முதலாக பெண்களுக்காகவே நிர்பயா திட்ட நிதியின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில், 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மண்டலத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் தற்போது 15 நடமாடும் ஒப்பனை அறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஒப்பனை அறை பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய இடங்களில் இந்த நடமாடும் வாகனங்களை நிறுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த வாகனத்தில் கழிவறை, உடைமாற்றும் சிறு அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், சானிடைசர் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
இந்த புதிய திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். பெண்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்த வாகனம் நிறுத்தப்படும் என்றும், இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில், அரசு தற்போது பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் சினிமாத் துறையினர் பயன்படுத்தும் கேரவன்களுக்கு சமமாக, சென்னை மாநகராட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்காக நடமாடும் ஒப்பனை அறை வாகனம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
* மண்டலத்திற்கு ஒன்று
நடமாடும் ஒப்பனை அறை வாகனம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க அவர்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்திற்கு ஒன்று என்ற கணக்கில் மொத்தம் 15 நடமாடும் ஒப்பனை அறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சுமார் ரூ.4.37 கோடி செலவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு ஒப்பனை அறையின் மதிப்பு ரூ.29.13 லட்சம். இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் இனிமேல் இளம் பெண்களும், தாய்மார்களும் பயப்படாமல் வெளியே சென்று வர முடியும். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் இவற்றில் அதற்கான வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.