திருவனந்தபுரம்: ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தந்தை, தாய் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். கடந்த தேர்தலில் அவரை தோற்கடிப்பதற்காக நடிகையும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியை நிற்க வைத்தனர்.
போட்டி பலமாக இருந்ததால், அமேதி தொகுதியுடன், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டியிட்டார். அதில் எதிர்பார்த்ததுபோலவே அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தார். ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வானார். இவர் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார் என குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்பட்டது.
எம்பிக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். மேலும் ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தான் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பு காலியாக இருக்கும் வயநாடு தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. ராகுல்காந்தி, மேல்முறையீடு செய்து, தடை பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கேற்ப வயநாடு தொகுதிக்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அதில் மாதிரி வாக்குபதிவும் நடத்தப்பட்டது. அனைத்து கட்சி பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தலை நடத்த மத்திய தேர்தல் கமிஷன் தயாராகி வருவதை தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ராகுல் காந்தி இங்கு போட்டியிட்ட போது அவருக்காக அவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார்.
அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பின்னர் நடந்த காங்கிரஸ் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். மேலும் அவரும் வயநாடு தொகுதி மக்களை தொடர்ந்து சந்தித்து கட்சிக்காக பிரசாரம் செய்து வந்தார். இதன்காரணமாக இந்த இடை தேர்தலில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தொண்டர்களும் இதனை ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.