விருதுநகர்: விருதுநகரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டர் ஜெயசீலன் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசுகையில், டாக்டர் கஞைர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நூறு இடங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. உலகில் முக்கிய பிரச்சனையாக வேலையின்மை உருவெடுத்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது சிரமமாகவும், வேலையளிப்போருக்கு தகுதியான நபர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்பங்களை இளைஞர்கள் வேலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மண்டல வேலைவாய்ப்பு இயக்குநர் சண்முகசுந்தரம், கோட்டாட்சியர் சிவக்குமார், வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்ஷினி மற்றும் பலர் பங்கேற்றனர்.