புதுடெல்லி: தனியார் சுயநிதி பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தை உடனே கட்டாயம் அமல்படுத்த வேண்டுமென 4 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. மாநிலங்களவையில் நேற்று பேசிய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, “கேரளா, தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு செய்வதை அமல்படுத்தவில்லை” என்று தெரிவித்தார். கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி எழுப்பிய கேள்விக்கு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசினார்.
அப்போது, “12ம் வகுப்பு வரை கல்வி வழங்குவது மாநில, ஒன்றிய அரசுகளின் முயற்சியாக இருக்க வேண்டும். தற்போது 1ம் வகுப்பில் 100 சதவீத மாணவர் சேர்க்கை உள்ளது. இதற்கு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியே காரணம். ஆனால் மாணவர்கள் வகுப்புகளுக்கு முன்னேறும்போது இந்த எண்ணிக்கை குறைகிறது. இந்த சரிவு அந்தந்த மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ளது. ஆர்டிஇ மற்றும் என்இபி ஆகிய இரண்டின் மூலம் அனைவரும் 12ம் வகுப்பு வரை கல்வி பெறுவதை உறுதி செய்வது அனைவரின் கடமையாகும். முந்தைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டம் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை கொண்டு வருவதற்கான நல்ல ஏற்பாடுகளை கொண்டுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.