சென்னை: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மருத்துவப் படிப்புகள், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் இடங்களை பெறும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அவர்களுக்கான உயர்கல்வி கட்டணம் அனைத்தையும் அரசே செலுத்தி விடுகிறது. இந்த ஒதுக்கீட்டால், அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பலருடைய உயர் கல்வியின் கனவுக்கு தமிழ்நாடு அரசு அரசு உறுதுணையாக உள்ளது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இன்ஜினியரிங், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை 3-வது சுற்று கலந்தாய்வு நடந்து வரும் சூழலில், ஏற்கனவே நிறைவு பெற்ற 2 சுற்றுகளில் இடங்களை தேர்வு செய்தவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். அந்தவகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரச் சென்ற மாணவ-மாணவிகளிடம் சில இன்ஜினியரிங் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக, மாணவ-மாணவிகளின் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிவகாசியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர சென்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் விடுதிக் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அனைத்து கட்டணமும் அரசு செலுத்தும்போது எதற்காக கூடுதல் கட்டணம் என சம்பந்தப்பட்ட மாணவர் கேள்வி எழுப்பும்போது, விடுதிக் கட்டணம் ரூ.60 ஆயிரம் அதில் ரூ.40 ஆயிரம்தான் அரசு செலுத்தும். மீதமுள்ள தொகையை நீங்கள்தான் செலுத்தவேண்டும் என்று ஆணித்தரமாக நிர்வாகம் தரப்பில் அந்த ஆடியோவில் சொல்லப்படுகிறது.
இதுமட்டுமல்ல, சில கல்லூரிகள் புத்தக கட்டணம், ‘’பவுண்டேஷன் கோர்ஸ்’’ என்ற பெயரில் கட்டணம், ஆய்வகத்துக்கான உடை என்ற பெயரில் கட்டணம் என கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு வலியுறுத்தி வந்தாலும், சில தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என பெற்றோர், கல்வியாளர்கள் கோரியுள்ளனர்.