புதுடெல்லி: ‘செபி தலைவரான பிறகும் கூட தனியார் வங்கியிடம் கடந்த 7 ஆண்டில் ரூ.16.8 கோடி சம்பளத்தை மாதபி புச் பெற்றது பிரதமர் மோடிக்கு தெரியுமா?’ என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இந்திய பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் இருவரும் அதானியின் போலி நிறுவனங்கள் என குற்றம்சாட்டப்படும் நிறுவனங்களில் பங்கு இருந்ததாக ஹிண்டின்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து மாதபி புச் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் கூறிவருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய செபி தலைவர் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றது முதல் ஐசிஐசிஐ மற்றும் அதன் துணை நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று வருகிறார். அந்த வகையில் கடந்த 7 ஆண்டில் அவர் ரூ.16.8 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது செபி தலைவராக அவர் பெற்ற சம்பளத்தை விட 5 மடங்கு அதிகம். இது செபி ஊழியர் சேவை விதிமுறைகள், 2001ன் பிரிவு 54ன்படி விதிமீறலாகும். செபி தலைவரைப் பற்றி இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரனையின் நியமனக் குழுவுக்கு தெரியுமா? செபி தலைவரை பாதுகாப்பவர்கள் யார்? எதற்காக அவ்வாறு செய்கிறார்கள்? கோடிக்கணக்கான இந்தியர்கள் முதலீடு செய்யும் பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி முழு வெளிப்படைத்தன்மை, நேர்மையுடன் செயல்பட வேண்டும். பிரதமரால் நேரடியாக நியமனம் செய்யப்படும் செபி தலைவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றி வருவதாக தெரிகிறது. இவ்வாறு கூறி உள்ளார்.