Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றங்களை கண்டுபிடிக்க தனிநபர் போன் உரையாடலை ஒட்டுக்கேட்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்க சிபிஐக்கு அதிகாரம் வழங்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2011ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கிஷோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் சரத் சந்திரன், ராஜகோபால் வாசுதேவன் ஆஜாகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டப்படி நியாயப்படுத்தாத வரை தனி நபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது. குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல.

பொது பாதுகாப்பு மற்றும் பொது அவசரம் காரணமாக மட்டும் தனி நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியும். நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது அமைதி, குற்றச்செயல்களை தடுப்பது போன்ற நிகழ்வுகளில் மட்டும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அனுமதியளிக்க முடியும். இந்த வழக்கில், பொது அவசரம், பொது பாதுகாப்பு எதுவும் சம்பந்தப்படவில்லை. எனவே, கிஷோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அதிகாரம் வழங்கி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.