சென்னை: ஐகோர்ட்டில் சென்னையை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் 2017ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி அதி கட்டணம் வசூலிப்பதால் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் கூறும் புகார் ஏற்புடையதல்ல. தனிக் குழு அமைத்து விசாரணை நடத்தியதில் டான் பாஸ்கோ பள்ளியில் உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது. எனவே மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் டான் பாஸ்கோ பள்ளி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் தேவராஜனின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.