சென்னை: போக்குவரத்து கழகங்கள் உள்பட அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை 1967 ஜூலை 18ம்தேதி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு மாநிலம் என அண்ணா பெயர் மாற்றம் செய்தார். அதன்படி, ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் என்று அறிவித்து, முதல்வர் அறிவுரையின்பேரில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டனர். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘தமிழ்நாடு நாள் என உருவாக்கிய அண்ணா தனது பேச்சு, எழுத்தால் தமிழகத்தில் உள்ள மக்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்றினார்.
அதை தொடர்ந்து கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி அனைவரும் பெருமிதம் கொள்ளும் அளவில், தமிழ்நாட்டை முன் உதாரணமாக திகழச் செய்து வருகிறார்’’ என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் உள்பட அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க உரிய உத்தரவு வழங்கப்பட்டு செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு உத்தரவை மீறும் பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும்’’ என்றார். விழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் நடந்த கருத்தரங்கில் பர்வீன் சுல்தானா தலைமையில் பேச்சாளர்கள் பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.