*கரூர் அருகே உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அருகே தனியார் செல்போன் டவரின் கம்பியில் மின்சாரம் தாக்கி தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார். செல்போன் டவர் நிர்வாகத்தை கண்டித்து மகாதானபுரத்தில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் ஊராட்சிக்குட்பட்ட தீத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி (57). இவரது மனைவி சரஸ்வதி (53). இவர் மாயனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டின் முன் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது அருகில் உள்ள தனியார் செல்போன் டவரின் கம்பியை தொட்டார்.
அதில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்தார். அதனைக் கண்ட அவரது கணவர் ரவி, மனைவி சரஸ்வதியை மீட்டு குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சரஸ்வதி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி கேள்விபட்டதும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரஸ்வதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தனியார் செல்போன் டவர் நிறுவன அதிகாரிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரஸ்வதியின் உறவினர்களிடம் நிர்வாகம் அலட்சியம் காட்டியாதால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாதானபுரம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் புஷ்பகனி மற்றும் மாயனூர் இன்ஸ்பெக்டர் கோபி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.