உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டுரங்கன் மகன் கார்த்திக். இவர் சேலத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். செம்பியன்மாதேவி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோர தடுப்பு கட்டுகளை தாண்டி கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் நசுங்கி சேதம் அடைந்தது. காரை ஓட்டிச் சென்ற கார்த்திக் படுகாயம் அடைந்தார். உடன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் சென்ற மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.