சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் தேர்வு செய்யப்பட்ட 143 இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்கள் 143 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 143 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ரூ.1 கோடி செலவினத்தில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளித்திட ‘சீர்திருத்த சிறகுகள்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டு சிறை நுாலகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. சிறைகளில் பணிபுரியும் மனநல ஆலோசகர்களின் மதிப்பூதியம் ரூ.15,000ல் இருந்து ரூ.25,000ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதோடு, 12 சமூக இயல் வல்லுநர்கள் பணியிடங்கள் மற்றும் 3 பெண் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு 143 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு திருச்சி தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், சிறைகளில் ஒரு மாத கால உள்களப் பயிற்சியும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.