சென்னை: புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த பணிக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி, தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியது தொடர்பாக செய்தி தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார்.
இதை பார்த்த நீதிபதிகள், இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.