சென்னை: தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் நேற்று பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை புழல் மத்திய சிறையில் காவலராக பணியாற்றி வரும் பரத் என்பவரை, நான் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். இதனால் பரத்துடன் பல இடங்களுக்கு தனியாக சென்று நெருக்கமாக இருந்தேன். இந்நிலையில், என்னிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தார்.
சந்தேகமடைந்த நான் இதுபற்றி விசாரித்த போது, பெற்றோர் பார்த்த பெண்ணை பரத் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. உடனே இதுகுறித்து விசாரிக்க பரத்தை தேனாம்பேட்டை பகுதியில் சந்தித்து கேட்டபோது, ‘ஆமாம், எனக்கு திருணம் ஆகிவிட்டது’ என்று சாதாரணமாக கூறினார். நான், கண்ணீர் மல்க எனக்கு நியாயம் வேண்டும் என்று பரத்திடம் கேட்டு தகராறு செய்தேன்.
அப்போது பரத், என்னை கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார். எனவே, என்னை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்த சிறை காவலர் பரத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம், பரத் அனுப்பிய குறுஞ்செய்திகள் இந்த புகார் மனுவில் இணைத்துள்ளேன். இவ்வாறு தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக, தேனாம்பேட்டை போலீசார் சிறை காவலர் பரத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளனர்.