திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரபு சங்கர் நியமிக்கப்பட்டார். இவர், மறுநாளே திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதும், தட்டை எடுத்து வந்து கை கழுவும் இடத்தில் வைத்தார். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் பிரபுசங்கர், க.மு.ந.சகோ நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து தானும் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
அப்போது உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதம், பள்ளியின் கட்டமைப்பு குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான என்.ஓ.சுகபுத்திரா, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், தலைமை ஆசிரியர்கள் சிவராணி, பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட கலெக்டர் சாப்பிட்டு முடித்தவுடன் அவரது தட்டை கையில் எடுத்ததும் பதறிய மற்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் தட்டை வாங்க முற்பட்டபோது வேண்டாம் என தடுத்தார். தான் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு வந்து கை கழுவும் இடத்தில் வைத்துவிட்டு கைகளை கழுவினார். இதை பார்த்த ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் கலெக்டருக்கு பாராட்டுகளை பெற்றது.
* காலை உணவு அருமை
பள்ளியில் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் பிரபுசங்கர், ‘‘தற்போது மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் மாணவர்களுக்கு அருமையாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் படிப்பதால் போதிய இட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் முதல் மற்றும் இரண்டாம் மாடிகளில் மாணவர்களின் நலன் கருதி தடுப்பு கிரில் கேட் அமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு இடங்களை கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.