தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 14வது வார்டு, ஜமீன் பல்லாவரம் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையம், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 13, 14, 15, 16வது வார்டுகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால் அதனை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அந்த மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று, முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனையில் பிறந்த முதல் குழந்தைக்கு அரசு சார்பிலும், தனது சொந்த செலவிலும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கினார்.
பின்னர், மருத்துவமனையில் போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மாத்திரை வாங்கும் இடத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர், எனவே அங்கு ஷெட் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என இ.கருணாநிதி எம்எல்ஏ உறுதியளித்தார். நிகழ்வில், மண்டலக்குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.