*கேரள சுற்றுலாப்பயணிகள் ‘படையெடுப்பு’
கொடைக்கானல் : கொடைக்கானலில் ரம்மியமான சூழல் நிலவி வருவதால் வார விடுமுறையை கொண்டாட கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று வார விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
நேற்று முன்தினம் முழுவதும் சாரல் மழை பெய்த காரணத்தினால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. நேற்று காலை முதலே மழையின்றி மேகமூட்டத்துடன் ரம்மியமான சூழல் நிலவியது. இதனால் அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் இருந்ததால் கொடைக்கானல் வந்த கேரள சுற்றுலாப்பயணிகள் ரசித்துச் சென்றனர்.