Saturday, June 22, 2024
Home » பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று கடைசிக்கட்ட தேர்தல்: மாலை 6.30 மணிக்கு பிறகு கருத்துக்கணிப்புகள் வெளியாகும்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று கடைசிக்கட்ட தேர்தல்: மாலை 6.30 மணிக்கு பிறகு கருத்துக்கணிப்புகள் வெளியாகும்

by Karthik Yash

புதுடெல்லி: நாடு முழுவதும் ஏப்.19 முதல் நடந்து வந்த மக்களவை தேர்தல் முடிவுக்கு வருகிறது. இன்று இறுதிகட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன. மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கான 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏப்.19ம் தேதி தொடங்கிய தேர்தல் இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளில் ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துவிட்டன.

இந்நிலையில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 7ம் கட்டமாக இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதே போல் ஒடிசாவில் 41 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதி கட்டமாக நடக்கும் 57 தொகுதியில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10.02 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.09லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கிய தேர்தல் பரபரப்பு 76 நாள்களுக்குப் பிறகு நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்தது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், தற்போது தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு மாலை 6.30 மணிக்கு பிறகு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளை அச்சு, காட்சி ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வெளியிடலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று மாலை 6.30மணிக்கு மேல் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வௌியாக உள்ளன. அதை தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதனுடன் ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அதற்கு முன்னதாக மக்களவை தேர்தலுடன் நடந்த அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 2) எண்ணப்படும்.

6 கட்டங்களில் எவ்வளவு சதவீதம்?
முதல்கட்டம் 66.14
2வது கட்டம் 66.71
3வது கட்டம் 65.68
4வது கட்டம் 69.16
5வது கட்டம் 62.20
6வது கட்டம் 63.36

* எந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகள்?
பஞ்சாப் 13
இமாச்சல் 4
உத்தரபிரதேசம் 13
மேற்குவங்கம் 9
பீகார் 8
ஒடிசா 6
ஜார்க்கண்ட் 3
சண்டிகார் 1

* மோடிக்கு எதிராக யார், யார்?
பிரதமர் மோடி உபி மாநிலம் வாரணாசியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். மோடிக்கு எதிராக அஜய் ராய் (காங்கிரஸ்), அதர் ஜமால் லாரி (பிஎஸ்பி), கோலிசெட்டி சிவ குமார் (யுக துளசி கட்சி), ககன் பிரகாஷ் யாதவ், (அப்னா தளம், காமராவதி), மற்றும் சுயேச்சைகள் தினேஷ் குமார் யாதவ், சஞ்சய் குமார் திவாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

* அருணாச்சல், சிக்கிம் சட்டப்பேரவைக்கு நாளை ஓட்டு எண்ணிக்கை
மக்களவை தேர்தலுடன் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்த அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிமில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அருணாச்சல் பிரதேசத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில், பாஜ 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஏ) 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜ வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் கடந்த ஏப். 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், சோரெங்-சாகுங், ரெனோக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதால், அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். அதனால் ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக வரும் நாளையே அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படும். இங்குள்ள மக்களவை தேர்தல் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படும். அருணாச்சலில் நாளை காலை 6 மணிக்கு வாக்குஎண்ணிக்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi