புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 3ம் தேதி புருனே. சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம் செல்ல உள்ளார். பிரதமர் மோடி தனது 3வது ஆட்சி காலத்தில் இத்தாலி, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். டெல்லியில் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில் “ இந்தியாவுக்கும், புருனேவுக்கும் இடையே தூதரக உறவு தொடக்கப்பட்ட 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி பிரதமர் மோடி வரும் 3, 4ம் தேதிகளில் புருனே நாட்டுக்கு செல்ல உள்ளார். இந்திய பிரதமர் ஒருவர் புருனேவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று செப்டம்பர் 4,5 ஆகிய தேதிகளில் மோடி சிங்கப்பூர் செல்ல உள்ளார்” என்றார்.