புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் 20 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்ததால், மோடி மூன்றாவதாக பிரதமராக பதவியேற்றார். இருந்தும் பாஜக தனிப் பெரும்பான்மை பலத்தை பெறாத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில்தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 20 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பஹல்காம் தாக்குதலை ெதாடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தங்கள் அரசுகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் திட்டங்களை பற்றி விளக்கக்காட்சிகள் மூலம் விவரித்தனர். இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையே புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கூட்டத்தில், மாநில அரசுகள் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் மக்களுக்கான சிறந்த ஆளுமை அரசை நடத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் வலிமை காட்டப்பட்டது. பாதுகாப்பு படைகளின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துக்கப்பட்டது. இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளோம்.
ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு, சமூக நீதி மற்றும் உள்ளடக்க வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கியமானது என்பது உள்ளிட்ட விசயங்கள் குறித்து தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும், மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டு நிறைவு, சர்வதேச யோகா தினத்தின் 10வது ஆண்டு விழா நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.