தவுசா: நாட்டு மக்களுக்காக உழைக்காமல் அதானிக்காக நாள் முழுவதும் பிரதமர் மோடி உழைக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி உள்ளது. பண்டி, தவுசா மாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மோடி பாரத மாதா கி ஜெய் என்று கூறுகிறார். ஆனால், அதானிக்காக 24 மணி நேரமும் உழைக்கிறார். ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம்தான் ‘பாரத மாதா’ இருக்கிறார் என்பதை உணர வேண்டும். பிரதமர் மோடி இரண்டு ‘இந்துஸ்தான்களை’ உருவாக்க விரும்புகிறார். ஒன்று அதானிக்கும் மற்றொன்று ஏழைகளுக்கும். மோடி தனது பேச்சுகளில் தான் ஒரு ஓபிசி என்று கூறுவார், ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியவுடன், பிரதமர் நாட்டில் சாதி இல்லை, ஏழைகள்தான் இருக்கிறார்கள் என்றார். சாதி இல்லை, ஆனால் மோடி மட்டும் ஓபிசியா.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்களை சந்தித்து பேசினேன். அவர்களில் பலர் ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக விரும்புவதாக என்னிடம் கூறினர். தற்போது 90 ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு மோடி நாட்டை நடத்துகிறார், அவர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசிக்கள். மக்கள் தொகையில் ஓ.பி.சிக்கள் சுமார் 50 சதவீதம். ஆனால் 90 அதிகாரிகளில் மூன்று பேர் மட்டுமே. எனவேதான்ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளோம். டெல்லியில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன், எங்களின் முதல் பணி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதாக இருக்கும். இவ்வாறு பேசினார்.