ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வருகிற 18ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள ரம்பான் மாவட்டத்தில் பனிஹால் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கல்டானில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘ஒன்றிய அரசை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அவர்களது கார்ப்பரேட் நண்பர்கள் நடத்துகிறார்கள். பிரதமரின் கார்ப்பரேட் நண்பர்களான அதானி மற்றும் அம்பானியின் பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்று என்னிடம் கூறப்பட்டது. எனவே தான் நான் ஏ1 மற்றும் ஏ2 என்று பயன்படுத்துகிறேன். இரண்டு கோடீஸ்வரர்களுக்கு நன்மை செய்வதற்காக 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் பாஜ அதனை விரும்பவில்லை. பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக தோற்கடித்துவிட்டோம். நாடாளுமன்றத்தில் அவருக்கு முன் அமர்ந்திருக்கிறேன். அவரது நம்பிக்கை போய்விட்டது என்று எனக்கு தெரியும். விரைவில் பிரதமர் மோடியையும், பாஜவையும் ஆட்சியில் இருந்து அகற்றுவோம்” என்றார்.