புதுடெல்லி: பிரதம மந்திரி இ-பஸ் சேவை திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார். சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில்,பிரதம மந்திரி இ பஸ் சேவை திட்டத்துக்கு ஒன்றிய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.57 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று இது குறித்து கூறுகையில்,‘‘ இந்த திட்டத்துக்காக10 ஆயிரம் ஏசி பேருந்துகளை விரைவில் வாங்க உள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை இணைந்து இந்த சேவையை அளிப்பர்’’ என்றார். ஒன்றிய நகர்புற விவகாரத்துறை செயலாளர் மனோஜ் ஜோஷி கூறுகையில்,‘‘ பிரதம மந்தி இ பஸ்கள் 169 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும். இதில் மாநில அரசுகள் தங்கள் பரிந்துரைகளை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.ஒருங்கிணைக்கப்பட்ட பஸ் போக்குவரத்து இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்றார்.